டக்ளஸ் தேவானந்தாவை  நான் நேசிக்கின்றேன் – வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரன்! (வீடியோ இணைப்பு)

Thursday, May 26th, 2016

டக்ளஸ் தேவானந்தாவை நான் நேசிக்கின்றேன். அவரும் நானும் அரசியல் காரணங்களுக்காக கருத்து வேறுபாடுகளுடன் மேடைகளில் பேசிக்கொண்டுள்ளோம். ஆனால் தனிப்பட்ட முறையில் டக்ளஸ் தேவானந்தாவை நானும் நேசிக்கின்றேன். என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சென்.றோக்ஸ் சனசமூக நிலையத்தில் மறைந்த முன்னோடிகள் நினைவுத்தூபி நேற்று திறந்துவைக்கப்பட்டது. இங்கு சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இந்த நிகழ்வு 22 ஆம் திகதி நடைபெறவிருந்தது. ஆனால் எனது தனிப்பட்ட காரணத்தால்  நிகழ்வை ஒத்திவைது என்னை வரும்படி விடாப்பிடியாக இருந்தீர்கள். எனினும் பலர் முதலமைச்சர் வராவிட்டல் எமது முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை  அழைக்கவா என கேட்டிருந்தீர்களாம். அதில் எதுவித பிரச்சினையும் இல்லை.

அரசியல் தலைவர்கள் தமது அரசியல் காரணங்களுக்காக  மட்டுமே ஏனைய கட்சிகளுடன் கருத்துமுரண்பாடுகளில் ஈடுபடுகின்றனர். மற்றும்படி அவர்களுடன் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளோ கோபதாபங்களோ இருப்பதில்லை.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் நானும்  அரசியல் காரணங்களுக்காக கருத்து வேறுபாடுகளுடன் மேடைகளில் பேசிக்கொண்டுள்ளோம். ஆனால் நான் தனிப்பட்ட முறையில் டக்ளஸ் தேவானந்தாவை நேசிக்கின்றேன். அவரும் எனக்கு மிகுந்த கௌரவம் அளிக்கின்றார்.

எமது எதிர்க்கட்சி தலைவர் தவராசாவும் அதே கட்சியைச் சேர்ந்தவர் தான். எமது வேறுபட்ட கருத்துக்களை நாம் நேரடியாகவே பேசிக்கொள்வோம். ஆனால் மனிதாபிமான முறையில் நாமிருவரும் மிகவும் நெருக்கமான உறவுகளைக்கொண்டுள்ளோம். அண்மையில் அவருடன் இணைந்து எமது அரசியல் யாப்பு முன்மொழிவுகளை  சபாநாயகரிடமும் எதிர்க்கட்சி தலைவரிடமும் கையளித்திருந்தோம்.

இன்றைய அரசியல் மாற்றங்களின் அடிப்படையில் ஏனைய கட்சித்தலைவர்கள் தமது அரசியல் சித்தாந்தங்களை மாற்றிக்கொண்டு இணைந்து செயற்படும் சூழ்நிலை காணப்பட்டுவருகின்றது. அவ்வாறான ஒரு நிலை ஏற்படுகின்ற போது ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஒருகுடையின் கீழ் அணிதிரண்டு தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக பாடுபடும் நாள் வெகுதொலைவில் இல்லை. அவ்வாறானதொரு நிலை வரும் என்பதால் நீங்கள் யாரையும் அழைத்து இதுபோன்ற சிறப்பு விழாக்களை செய்யமுடியும். மக்களாகிய நீங்கள் கட்சிரீதியாக மனக்கசப்புகளை உருவாக்குவதை தவிர்த்து உங்களது முன்னேற்றங்களுக்கான பாதைகளில் பயணிக்கவேண்டும் என்றார்.

Related posts:

தொல்பொருள் பகுதிகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணைகள் - தொல்பொருள் திணைக்களம்...
மக்கள் அதற்கு கட்டுப்பட்டு நடக்கவில்லை எனின் சட்டங்கள் மீண்டும் கடுமையாக்கப்படும் – சுகாதார சேவைகள் ...
அனைத்து தடுப்பூசிகளும் தரம் வாய்ந்தவை: இளைஞர்களுக்கென்று பிரத்தியேகமாக எதுவுமில்லை என வைத்திய நிபுணர...