ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ச!

Saturday, September 14th, 2019


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான போட்டியாக அமையப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும், இதனால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் போட்டியேற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னரே அவ்விரு நாடுகளும் எமது தேர்தல் தொடர்பான வியூகங்களை வகுக்க தொடங்கி விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

ஸ்ரீலங்கா பிரஜைகள் என்ற வகையில் நாங்கள் இன்னும் ஜனாதிபதி தேர்தலுக்குத் தயாராகவில்லை. இன்னும் வேட்பாளர்களை அடையாளம் காணமுடியவில்லை தானே. இன்னும் தெரிவுசெய்துதான் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் சீனாவும், அமெரிக்காவும் இந்த ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே ஆரம்பித்துவிட்டன. அவர்களுடைய தலையீட்டின் அளவு என்ன என்பதையும், அதனூடாக பெறப்படுகின்ற பிரதிபலனுக்கு உரிமைகொண்டாட முடியும் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.

அதனூடாக இந்த நாட்டை அடிமைகளின் தீவுகளாக மாற்றியமைக்க முடியும் என்பதையும் அவர்கள் அறிவார்கள். ஆகவே இந்த ஜனாதிபதி தேர்தல் போட்டியானது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் போட்டியல்ல.

நாட்டில் எந்தவித பாதுகாப்பும் இல்லை. உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்து இரகசிய பொலிஸார் முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தனர்.

மாவநெல்ல பகுதியில் புத்தர் சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் பெறப்பட்ட தகவலுக்கு அமைய சஹ்ரான் தலைமையிலான பிரபல உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் பொலிஸாரும், இரகசிய பொலிஸாரும் அவர்களை விடுதலை செய்தனர்.

ஏனைய சந்தேக நபர்களைக் கைது செய்ய முயற்சி எடுத்தபோது அசாத்சாலியும், பூஜித் ஜயசுந்தரவும் அதனை தடுத்தனர். அவர்களிடமிருந்தா எமக்கான தேசிய பாதுகாப்பை எதிர்பார்க்க முடியும்?

குறைந்த பட்சம் தேசிய பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது என்பதை அறிவிக்க மூன்று மாதங்கள் என்பது தாமதம் தானே. நான் இரகசிய பொலிஸார் பொறுப்பதிகாரியாக இருந்தால் ஒரே வாரத்திற்குள் வழக்கு தாக்கல் செய்திருப்பேன். அந்தளவுக்கு சாட்சிகள் இருக்கின்றன.

நியூஸிலாந்து கிறிஸ்ட்சேர்ச் தாக்குதல் இடம்பெற்று அடுத்த நாளிலேயே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஏன் ஒரு வாரத்திற்குள் அதனை செய்ய எங்களால் முடியாதா?

இதற்கான முதல் குற்றவாளி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. அடுத்தவர் சபாநாயகர் கருஜய சூரிய. அதன் பின்னரே சஹரான் குழுவினரை இந்த விடயத்தில் குற்றவாளிகளாக தொடர்புப் படுகின்றனர்.

இது குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலும் சாட்சி வழங்கியுள்ளேன். அவ்வாறு இருக்கும்போது மீண்டும் குழு அமைத்து விசாரணை முன்னெடுப்பது என்பது அவசியமற்றதாகும்” என அவர் கூறியுள்ளார்.

Related posts: