ஜெனிவாவால் இலங்கையின் நாடாளுமன்றத்தை மாற்ற முடியாது – போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கையை சர்வதேச நீதிமன்றிலும் நிறுத்த முடியாது – அமைச்சர் பீரிஸ் உறுதிபடத் தெரிவிப்பு!

Tuesday, February 15th, 2022

போர்க்குற்றம் தொடர்பாக எந்தச் சூழ்நிலையிலும் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த முடியாது என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஜெனிவாவால் நாடாளுமன்றத்தை மாற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்

இவ்விடயம் தொடர்பாக சர்வதேச சட்டங்கள் மிகத் தெளிவாக உள்ளமையால் இலங்கைக்கு எந்தவிதமான ஆபத்தும் கிடையாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் பொறுப்புக்கூறல் பிரச்சினைக்கு சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியினர் பதிலளித்த விதம் குறித்து அதிர்ச்சியும், ஆச்சரியமுமடைவதாகவும் அவர் கூறினார்.

குறிப்பாக அப்போதைய அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் மீது சுமத்தப்பட்ட ஆதாரமற்ற போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரித்தானிய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்தும் அவர் அதிருப்தி வெளியிட்டார்.

அத்தோடு இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு மனித உரிமைப் பிரச்சினை ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுவதாகவும் நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளில் கூட ஜெனிவா தலையிடுவதாகவும் அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார்.

அதிகாரப் பகிர்வு, இராணுவம், பொலிஸ், மத்திய அரசுக்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான அதிகார சமநிலை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அதன் திருத்தங்கள் என்பன நாடாளுமன்றமும் இலங்கை மக்களும் தீர்மானிக்க வேண்டிய விடயங்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உள்ளுர் பொறிமுறைகளுக்கு மிகவும் தேவையான ஆதரவை வழங்குவதற்குப் பதிலாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தீர்வுகளைத் திணிக்கத் தூண்டுகிறது என்றும் இது நீடிக்காது என்றும் பீரிஸ் குறிப்பிட்டார்.

இருப்பினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு முழுமையாக ஒத்துழைக்க இலங்கை தயாராக இருப்பதாக அறிவித்த அமைச்சர் பீரிஸ், ஜெனிவாவால் நாடாளுமன்றத்தை மாற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: