ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன – ஸ்டெப் புளக் இடையே சந்திப்பு!

Sunday, October 20th, 2019

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் சுதந்திரம், ஜனநாயகமிக்க தேர்தல் முறைமையை தொடர்ச்சியாக பேணி வருவது தொடர்பில் ஜனநாயக நாடுகள் இலங்கையை பாராட்டியுள்ளதாக நெதர்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஸ்டெப் புளக் தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள நெதர்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்த போதே இதனை தெரிவித்தார்.

இதன்போது, இலங்கைக்கும் நெதர்லாந்துக்குமிடையிலான இருதரப்பு மற்றும் பிராந்திய செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்தமுறை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின்போது கட்சி சார்பின்றி தான் செயற்படப்போவதாக தெரிவித்த ஜனாதிபதி, இந்த தேர்தல் அமைதியான, ஜனநாயகமிக்க, ஊழல், மோசடியற்ற தேர்தலாக அமைவதற்கு தன்னால் உத்தரவாதமளிக்க முடியுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பக்கச்சார்பற்ற சுயாதீனமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு காவற்துறையினருக்கும் முப்படையினருக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்த நெதர்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளின் போது சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் தேவை குறித்து கருத்து வெளியிட்டார்.

Related posts: