ஜனாதிபதி மாளிகையில் இருந்த 17.5 மில்லியன் வந்தது எப்படி? – கோட்டாபயவின் சட்டத்தரணி வாக்குமூலம்!

Friday, July 21st, 2023

கடந்த வருடம் இடம்பெற்ற காலிமுகத்திடல் போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் கண்டெடுக்கப்பட்ட 17.5 மில்லியன் நிதித் தொடர்பில் எதிர்வரும் 28ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலமொன்றை பதிவுசெய்யவுள்ளது.

நேற்றைய தினம் இந்த நிதி தொடர்பிலான இரண்டாவது வாக்குமூல அறிக்கையை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றில் சமர்ப்பித்த போதே எதிர்வரும் 28ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதியப்படவுள்ள தகவலையும் கூறியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜப க்ஷவின் சார்பில் நேற்று நீதிமன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் குழு, ஜனாதிபதி செயலகத்தில் இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட நிதி எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்ற தகவலை வெளிப்படுத்தியுள்ளனர்.

போராட்டக்காரர்களால் அழிக்கப்பட்ட வீடுகள் மற்றும் சேதமாக்கப்பட்ட சொத்துக்களை மீட்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வர்த்தக நிதியத்திலிருந்துதான் இந்த நிதி தமக்கு கிடைக்கப்பெற்றிருந்தாகவும் சட்டத் தரணிகள் ஊடாக கோட்டாபய ராஜ பக்ஷ நீதிமன்றில் கூறியுள்ளார்.

போராட்டக்காரர்களால் அழிக்கப்பட்ட சொத்துக்களை மீள புதுப்பிப்பதற்கு குறித்த நிதி பயன்படுத்தப்பட இருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் கூறியுள்ளனர்.

இதேவேளை, மிரிஹான சம்பவத்தின் பின்னர் தான் ஜனாதிபதி மாளிகையிலேயே வசித்தாகவும் கிளர்ச்சியாளர்கள் ஜனாதிபதி மாளிகையை கையகப்படுத்திய பின்னர், ஏராளமான ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்துள்ள வாக்கு மூல அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பணம் பெறப்பட்ட ஆவணம் காணாமல் போயுள்ளதால் பணத்தைப் பெற்றவர்களின் பெயர் விபரங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாகவும் குறித்த வாக்கு மூல அறிக்கையில் கூறிப்பட் டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி அறிவிக்கும் இடத்திற்குச் சென்று வாக்கு மூலத்தைப் பெற்றுக் கொள்வதாக கடிதம் மூலம் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: