ஜனவரி மாதமே பொருத்தமானது – பிரதமர்!

Wednesday, September 20th, 2017

தேர்தல்களை ஒத்திவைக்கும் தேவை அரசாங்கத்திற்கு இல்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றதில் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதத்தில் கல்வி பொது சாதாரண தரப்பரீட்சை நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து நத்தார் பண்டிகை நிகழ்வு இடம்பெறவுள்ளது. இவற்றிற்கு இடையூறு ஏற்படாதவகையில் தேர்தலை ஜனவரி மாதத்தில் நடத்துவது பொருத்தமானது என்று கட்சித்தலைவர்களின் கருத்தாக அமைந்திருப்பதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில் ,

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் பிரதேச சபை, நகரசபை மற்றும் மாநகர சபை உள்ளிட்ட அனைத்து தேர்தல்களும் புதிய நடைமுறைக்கமைவாக நடத்துவதற்கு கௌரவ சபை தீர்மானித்திருப்பதை நாம் அறிவோம். இதற்கமைவாக இதுவரை காலமும் நடைமுறையிலிருந்த விகிதாசார முறைக்கு பதிலாக தொகுதிவாரியை கேந்திரமாக கொண்டு கலப்பு முறை கடைப்பிடிக்கப்படவுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

இந்த புதிய முறை அரசியல் கட்சிகள் பெரும்பாலானவை ஒன்றிணைந்து தயாரித்த ஒன்றாகும். எந்த தரப்பிற்கும் அநீதி இடம்பெறாதவகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. எமக்கு தேவை பெரும்பாண்மை கொண்ட அரசாங்கத்தின் கருத்தாகும். எதுவும் பலவந்தமாக சுமத்தப்படவில்லை. அனைவரது கருத்துக்கள் கேட்டறிந்தபின்னர் அனைவரும் திருத்திக்கொள்ளக் கூடிய ஒழுக்கம்மிக்க தேர்தல் முறை ஒன்றை அறிமுகப்படுத்துவதே நோக்கமாகும்.

தொகுதி வாரி தேர்தலில் வாக்காளர்களுக்கு பொறுப்பு கூறக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பெற்றுக்கொள்வதற்கான முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.  சிறிய கட்சிகளுக்கு அநீதி ஏற்படாதவகையில் நடந்துகொள்ளவேண்டும். பெண்களுக்கு பிரதிநிதித்துவத்தை வழங்கும் வகையில் இதனை தயாரிப்பதற்காக பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை ஏற்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு காலத்தை செலவிடவேண்டி ஏற்பட்டது. இது தேர்தலை ஒத்திவைப்பதற்காகவே என்று அர்த்தப்பபடுத்த முயற்சிப்பது தவறானதாகும்

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக இவ்வாறான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. தேர்தலை ஒத்திவைக்கவேண்டிய தேவை எமக்கில்லை . ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும், ஐக்கிய தேசியக்கட்சிக்கும் தேர்தலை ஒத்திவைக்கவேண்டிய தேவை எதுவும் இல்லை என்று பிரதமர் குறிப்பிட்டார் .

Related posts: