ஜனவரிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தத்தை எட்ட முடியும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை!

Tuesday, November 1st, 2022

ஜனவரிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியும் என அரசாங்கம் நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் இடம்பெற்ற இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் 32 ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்திலேயே அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

பனிப்பாறையில் விழுந்த டைட்டானிக் கப்பலை தாம் கையகப்படுத்தியதாகவும் தற்போது கப்பலை பனிப்பாறையில் இருந்து நகர்த்த முயற்சிப்பதாகவும்  பனிப்பாறையில் இருந்து டைட்டானிக் கப்பல் நகர்ந்தால் நாடு முன்னேற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தன்னை திவாலானதாக அறிவித்துவிட்டதாகவும் எனினும் நிதியுதவிக்காக சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையை மேற்கொள்ள முடியும் என அரசாங்கம் நம்புவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அதற்கமைய, நவம்பர் நடுப்பகுதியில் ஒரு ஒப்பந்தத்திற்கு வரலாம் என்றும் டிசம்பர் நடுப்பகுதியில் சர்வதேச நாணய நிதியம் வரை சென்றால், தங்களுக்கு ஒரு பெரிய நன்மை கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், ஜனவரி மாதத்திற்குள் அதனைப் பெறுவதை இலக்காகக் கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

கடனாளிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி, தெரிவித்துள்ளார்.

தான் முதலில் பாரிஸ் கிளப்புக்கு (Paris Club )சென்றதாகவும் அங்கு கடன் வழங்குபவர்கள் அனைவரும் மேற்குல நாடுகளையும் ஜப்பானையும் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எமக்கு கடன் வழங்க முன்வந்துள்ள மூன்று நாடுகளுள் ஒன்று மாத்திரமே பாரிஸ் கிளப்பிற்கு சொந்தமானது என்றும் மற்றைய நாடுகளான இந்தியா மற்றும் சீனா ஆகியவை அதில் அங்கத்துவம் வகிக்காத நாடுகள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், தான் ஏற்கனவே ஜப்பானுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதோடு, தற்போது இந்தியா மற்றும் சீனாவுடனும் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இலங்கை இந்த வருடத்தைக் கடந்து அடுத்த வருடத்திற்குச் சென்று இரண்டு வருடங்களை எப்படியாவது சமாளித்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், எரிபொருளின் விலை தற்போது குறைந்துள்ளபோதிலும் உக்ரைன் போர் மற்றும் குளிர்காலம் காரணமாக டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கும் என்று அனைவரும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனவே, நாடு எதிர்கொள்ள வேண்டிய அடுத்த பிரச்சினை இதுதான் என்றும் அவர் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: