ஒருங்கிணைப்பு குழு தலைவரின் பரிந்துரைகள் மக்களுடையதல்ல – அதை எமது சபை நிராகரிக்கிறது – சிவகுரு பாலகிருஷ்ணன்!

Saturday, February 22nd, 2020

கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் ஜனாதிபதியால் முன்னெக்கப்பட்டுவரும்  கிராமத்துக்கு இரண்டு மில்லியன் திட்டத்தில் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் தனது சுயநலங்களுக்காக தலையீடு செய்து வருவதுடன் திட்டங்களை மாற்றியமைத்தும் வருகின்றார்.

மக்களால் முன்மொழியப்படாத அவரது முன்மொழிவுகளை எமது சபையால் ஏற்கமுடியாது. மக்களால் ஏற்கனவே முன்மொழியப்பட்ட திட்டங்களே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி மேற்கு பிரதே சபை உறுப்பினரும் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளருமான சிவகுரு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வலி.மேற்கு பிரதேச சபையின் 24 ஆவது அமர்வு உப தவிசாளர் தலைமையில் நேற்றையதினம் நடைபெற்றது. இதன்போது பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்பட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

சேவையாளர் அலுவலகங்களில் நடைபெற்ற கூட்டங்களில் எமது பிரதேசத்தின் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்காக மக்களால் முதன்மைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் தலையீடு செய்து திட்டங்களை தனது சுயநலன்களுக்காக மாற்றியமைத்தார் இது ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும்.

கடந்த காலங்களில் நாம் ஆட்சி அதிகாரங்களில் இருந்தபோது மக்களின் நலன்களை முன்னிறுத்தியே இவ்வாறான திட்டங்களை செயற்படுத்தியிருந்திருக்கின்றோம்.

ஆனால் இன்று மக்களின் கருத்துக்கள் புறக்கணிக்கப்பபட்டு ஒரு சிலரது சுயநலன்களுக்காக  மாற்றப்படுகின்றது. அது மட்டுமல்லாது திட்டங்களை முழுமையயாக நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கும் இவரது செயற்பாடுகள் காணப்படுகின்றன. எனவே இவ்வாறான அழுத்தங்கள் நடைமுறைக்கு ஒவ்வாத முன்மொழிவுகளை எமது சபையால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

Related posts: