சொந்த இடங்களில் இயங்க தயாராகும் யாழ். காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி!

Thursday, March 24th, 2016

யாழ். காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி மற்றும் நடேஸ்வராக்  கனிஸ்ட வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் மிக விரைவில் சொந்த இடங்களில் இயங்கவுள்ளன.  இதற்கான நடவடிக்கைகள் கல்வித்திணைக்களம் மற்றும்  பாடசாலைகளின் நிர்வாகத்தினரால்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் ஏப்ரல் மாதம்-18 ஆம் திகதி ஆரம்பமாகும் இரண்டாம் தவணை முதல் குறித்த  பாடசாலைகளைச்  சொந்தவிடங்களில்  இயக்குவதற்கு திட்டமிட்டு அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நடேஸ்வராக் கல்லூரி உட்பட 109 ஏக்கர் நிலப்பரப்பு இந்த மாதம் -12 ஆம் திகதி விடுவிக்கப்பட்டு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

விடுவிக்கப்பட்ட நடேஸ்வராக் கல்லூரியின் பெரும்பாலான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் பல கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளன. கனிஸ்ட வித்தியாலயத்தின் கட்டடங்கள்  சேதங்களுடன் காணப்படுகின்ற போதும் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

தற்போது  தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்துக்கு அருகில்  தற்காலிகமாக  சுமார் 200 மாணவர்களுடன் இயங்கிவரும் இரு பாடசாலைகளும் தமது சொந்தக்  கட்டிடங்களுக்கு விரைவில் மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகளும்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: