சூரிய சக்தி மின் உற்பத்தித் திட்டங்களை மேம்படுத்துவதற்கு இந்தியா உதவி – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, June 16th, 2021

“சுபீட்சத்தின் நோக்கு“ கொள்கைத் திட்டத்துக்கு அமைய, சூரிய சக்தியிலான மின் உற்பத்தியை அதிகரித்து, தேசிய மின் கட்டமைப்புக்கு மீள்பிறப்பாக்கச் சக்திவளப் பங்களிப்பை அதிகரிக்கும் திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி கொட்டபய ராஜபக்ச இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்தி அரசாங்கம் இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வங்கியின் ஊடாக 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள ஜனாதிபதி –

அரச கட்டிடங்கள், சமய ஸ்தாபனங்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் வீடுகளின் பங்களிப்பைப் பெற்று, சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்வதே அரசாங்கத்தின் முக்கிய திட்டமாகும். இதன் மூலம் குறைந்த வருமானம் பெறும் வீடுகளுக்கான பொருளாதார நன்மைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அரச நிறுவனங்களில் மின்சாரத்துக்காக செலவாகும் அதிக தொகையைக் குறைப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை காணித் தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் வகையில், நீரில் மிதக்கும் சூரிய மின்சக்தி முறைமைகளை நிறுவுவதும் இதில் உள்ளடங்கும். இதன் முதற்கட்டமாக, நாடாளுமன்றத்துக்குத் தேவையான மின்சாரத்தை, தியவன்னா ஓயாவை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது. அத்துடன் தேசிய மின் கட்டமைப்புக்கு பிரவேசிக்க முடியாதிருக்கும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு, மின்கலங்களின் மூலம் சூரிய மின் சக்தி களஞ்சிய வசதிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சித்திட்டத்துக்காக, இந்திய அரசாங்கமானது, இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வங்கியின் ஊடாக 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதுடன், இதற்கான இரு தரப்பு கடன் ஒப்பந்தமும் செய்துகொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வங்கிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள இக்கடன் ஒப்பந்தம், இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினதும் மின்சக்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, அவர்களினதும் முன்னிலையில், நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகல அவர்களுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களுக்கும் இடையில் பரிமாறிக்கொள்ளப்பட்டது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: