சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றும் தொழில்நுட்பத்தில் மாணவர்கள் வெற்றி!

Friday, May 25th, 2018

வடக்கு மாகாண 1 ஏபி பாடசாலைகளைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட மாணவக் குழு சூரிய கலம் மூலமாக சூரிய சக்தியை மின்சக்தியாக மாற்றும் தொழில்நுட்பத்தில் வெற்றி கண்டுள்ளன. அதன் மூலமாக மாணவர்கள் சிறு மின் விசிறி உள்ளிட்டவற்றை இயக்குவதில் சாதித்துள்ளனர் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் பி.றவிறாஜன் தெரிவித்தார்.

வெளிக்களச் செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாண விஞ்ஞான சங்கம், வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து யாழ்ப்பாணம் மற்றும் மேற்கு நோர்வே பல்கலைக்கழகங்களின் அனுசரணையுடன் இது தொடர்பான பயிற்சிகளை வழங்கியிருந்தது.

தரம் 8 க்கும் 11 க்கும் இடைப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் ஜி.சி.ஈ. உயர்தர விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்களுக்குமென 2 ஆயிரத்து 600 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத் தூய சக்தித் தொழில்நுட்பம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது. சூரியப்படல் தொடர்பான பிரயோகச் செய்முறை விளக்கமும் இடம்பெற்றது. இந்த செய்முறைவிளக்கம் குறிப்பாக பாடசாலை மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தச் செயற்றிட்டத்தை முன்னெடுக்க மாணவர்கள் தீவிர ஆர்வம் கொண்டுள்ளனர். பலர் எம்முடன் வந்து கலந்துரையாடினர். சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றுவதற்கான சூரிய கலம் தயாரிப்பதற்கான உபகரணங்களைப் பெறுவதில் அவர்கள் பண நெருக்கடியை எதிர்கொள்ளலாம். அவை கிடைக்கும்போது குறித்த மாணவர்கள் அந்தத் தொழில்நுட்பத்தில் சிறப்பாகச் செயற்படுவர். இதுவரை 10 மாணவக் குழுக்கள் வந்திருந்தாலும் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் பேராசிரியர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பௌதிகவியற்றுறையில் புதிதாக அமைக்கப்பட்ட தூய சக்தி ஆய்வுகூடம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்டது. சுமார் 150 சதுர மீற்றர் பரப்பில் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட இந்த ஆய்வுகூடம் எமது சமூகத்திலும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் உள்ள தூயசக்தி துறைசார் ஆய்வாளர்களுக்குப் பயனுள்ளதாக அமையுமென்று தெரிவிக்கப்பட்டது. ஆய்வுகூடத்துக்குத் தேவையான சுமார் 20 மில்லியன் மதிப்புள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வு உபகரணங்கள் மற்றும் ஆய்வுகூடத் தளபாடங்கள் போன்றவையும் இந்தச் செயற்றிட்ட நிதியுதவியின் கீழ் மேற்கு நோர்வே பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

ஆராய்ச்சிக்கும் உயர் கல்விக்குமான தூயசக்தி தொழில்நுட்ப செயற்றிட்டத்தின் இன்னுமொரு வெற்றிப்படியே தூயசக்தித் தொழில்நுட்ப முதுநிலை விஞ்ஞான மாணிக் கலைத்திட்ட வடிவமைப்பு. இந்தத் திட்டத்தின் கீழ் தூய சக்தி தொடர்பான ஆய்வுகளில் மாணவர்கள் ஈடுபடுவது மட்டுமல்லாது இந்தச் செயற்றிட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்ட நவீன ரக ஆய்வுகூட உபகரணங்களைக் கையாளும் சந்தர்ப்பங்களையும் இந்த மாணவர்கள் பெறுவர். சிறப்புப் பெறுபேறுகளைப் பெறும் மாணவர்கள் நோர்வேயில் சிறப்புப் பயிற்சிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது தவிர இந்தச் செயற்றிட்டத்தின் கீழ் ஆராய்ச்சிப் பட்டப்பின் படிப்பைத் தொடரும் மாணவர்கள் ஆறு மாதங்கள் மற்றும் ஒரு வருட காலப்பகுதிக்கு நோர்வே சென்று தம் ஆய்வை மேற்கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: