சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க துரித முயற்சிகள் முன்னெடுப்பு – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவிப்பு!

Wednesday, October 5th, 2022

2021 இல் எட்டப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகையை 2022 இல் அடையும் எண்ணிக்கையில் இருந்து குறைந்தது ஐந்து மடங்கு அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை விகிதம் எதிர்பார்த்த அளவை விட மிகக் குறைவாக உள்ளதால், வருடத்தின் எஞ்சிய மாதங்களில் சர்வதேச பார்வையாளர்களின் வருகையை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை உறுதியளித்துள்ளது.

2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் குறைந்தது 972,475 சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே எமது இலக்காகும். இது 2021 ஆம் ஆண்டுக்கான மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையை விட ஐந்து மடங்கு அதிகம் எனவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

“கடந்த 9 மாதங்களில் வந்தவர்களின் எண்ணிக்கையில் நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை. செப்டெம்பர் மாதம் வருகை தந்தவர்களின் எண்ணிக்கை கடுமையான வீழ்ச்சியாகும், முக்கிய ஆதார சந்தைகளால் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும் 29,802 பார்வையாளர்கள் மாத்திரமே நாட்டிற்குள் வருகைத் தந்தனர்.

“செப்டெம்பர் வரலாறு முழுவதும் எப்போதும் மிகக் குறைந்த வருகையைப் பதிவு செய்திருக்கிறது. கடந்த காலத்தில் கூட, அந்த ஆண்டின் வேறு எந்த மாதத்துடனும் செப்டெம்பர் மாதத்தை ஒப்பிடும்போது, சதவீத அடிப்படையில், வீழ்ச்சி மிகவும் அதிகமாக உள்ளது, ”என அவர் தெரிவித்துள்ளார்..

நாடு அதன் சுற்றுலாத்துறை மீட்சியில் அதன் போட்டியாளர்கள் மற்றும் அதன் பிராந்திய சகாக்களை விட மிகவும் பின்தங்கியிருக்கிறது. மாலைதீவு போன்ற போட்டி நாடுகள் கடந்த பல மாதங்களாக மாதாந்த அடிப்படையில் 100,000 சுற்றுலாப் பயணிகளை வரவேற்கின்றன அதேவேளை இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை 30,000 முதல் 60,000 வரை உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: