சுற்றாடலுக்கு பாதிப்பில்லாத வகையில் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, August 30th, 2020

சுற்றாடலுக்கு பாதிப்பில்லாத வகையில் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே தனது எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நெலுவ – லங்காகம வீதி புனர்நிர்மாணத்தின் போது சிங்கராஜ வனப் பூங்காவிற்கு பாதிப்பு ஏற்படுவதாக இலத்திரனியல், அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக பிரசாரம் செய்யப்பட்டது.

அதன் உண்மைத்தன்மை பற்றி நேரில் கண்டறிவதற்காகவும் நிபுணர்கள் மற்றும் பிரதேச மக்களின் கருத்துக்களை கேட்டறிவதற்காகவும் ஜனாதிபதி நெலுவ லங்காகம பிரதேசத்திற்கு சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது சிங்கராஜ வனப்பூங்கா மற்றும் வீதி புனரமைப்புக்கு உள்ளாகும் கிராம பிரதேசங்களில் சுற்றாடல் முறைமையை பாதுகாத்து நீண்டகாலமாக இருந்து வரும் மக்களின் தேவையான வீதி நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்பதாக லங்காகம கிராமம் வலகம்பா மன்னர் காலம் வரை நீண்ட வரலாற்றைக் கொண்ட கிராமத்தில் தேயிலை பயிர்ச் செய்கையே  பிரதான வாழ்வாதாரமாகும். 100 வருடங்களுக்கு மேலாக கிராமவாசிகள் சிங்கராஜ வனப் பூங்காவை அண்மித்ததாக உள்ள வீதியின் தெனியாய மற்றும் நெலுவ பகுதிகளுக்கு தேயிலை கொழுந்தினை எடுத்துச் செல்கின்றனர்.

நெலுவ, உடுகம, கராபிட்டிய வைத்தியசாலைகளுக்கு நோயாளிகளை எடுத்துச் செல்வதற்கும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் நாளாந்த ஜீவனோபாய நடவடிக்கைகளில் வீதிப் போக்குவரத்து பெருந் தடையாக உள்ளது. இதற்கு தீர்வாக “நெலுவ – லங்காகம – பிட்டதெனிய” வீதி புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையில் சிங்கராஜ வனப்பூங்காவிற்கு பாதிப்பு ஏற்படுவதாக சூழலியலாளர்கள் சிலர் முன்வைத்த குற்றச்சாட்டு காரணமாக புனரமைப்பு பணிகளை நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்நிலையில் வீதி அபிவிருத்தி, வன ஜீவராசிகள், வனப்பூங்கா, சுற்றாடல் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சு அதிகாரிகளுடனும் புனரமைக்கப்படும் வீதியை ஜனாதிபதி நேரில் சென்று பார்வையிட்டார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கண்காணிப்பின் கீழ் இராணுவத்தினர் வீதி புனர்நிர்மாணப் பணிகளை பொறுப்பேற்றுள்ளனர். 18 கிலோ மீற்றர் தூரத்தை 3 மாத காலப்பகுதியில் நிறைவு செய்வதற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

வீதி நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் லங்காகமவில் இருந்து தெனியாயவிற்கு செல்வதற்கு செலவான சுமார் 4 மணி நேரம் 45 நிமிடங்களாக குறைவடையும். புனர்நிர்மாணப் பணிகளின் போது வனப்பூங்காவிற்கு அல்லது சுற்றாடல் முறைமைக்கு பாதிப்பு ஏற்படக்கூடாதென ஜனாதிபதி கடுமையாக அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் புனர்நிர்மாணப் பணிகளின் பின்னர் நெலுவையில் இருந்து தெனியாயவிற்கு பஸ் வண்டி ஒன்றை நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பபட்டது.

சுமார் 700 குடும்பங்கள் வசிக்கும் லங்காகம பிரதேசத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் 03 மரக்கன்றுகள் வீதம் இலவசமாக வழங்கி 2,100 மரக் கன்றுகளை நாட்டி அவர்களினாலேயே வனப்பூங்காவிற்கு பங்களிப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: