சுமார் 30 ஆயிரம் அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளனர் – இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவிப்பு!

Tuesday, December 27th, 2022

இந்த வருடத்தின் இறுதியில் சுமார் 30 ஆயிரம் அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளனர் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மற்றும் இந்த வருடத்தில் 60 வயது பூர்த்தியாகிய அரச ஊழியர்களே இவ்வாறு ஓய்வு பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களை சமநிலைப்படுத்துவதற்கான பிரதமரின் செயலாளரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

இந்நிலையில்

வருட இறுதியில் ஓய்வு பெறும் பெருந்தொகையான அரசாங்க ஊழியர்களுக்கு பதிலாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்காக பிரதமர் தினேஷ் குணவர்தன விஷேட குழு ஒன்றை நியமித்துள்ளார்.

60 வயதில் அரசாங்க ஊழியர்கள் ஓய்வு பெற வேண்டும் என்ற தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த வருடத்தில் பெருமளவு அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளனர்.

அதனால் நிலவும் வெற்றிடங்கள் மற்றும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையிலேயே அதற்கான செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கு பிரதமரினால் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதமரினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழுவில் பிரதமரின் செயலாளர் தலைமையில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஆகியோர் ஏனைய அங்கத்தவர்களாக செயற்படவுள்ளனர். அந்த குழுவானது இந்த வருட இறுதியில் ஓய்வு பெறும் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பில் கவனம் செலுத்தி அதற்காக மேலும் ஊழியர்களை நியமிப்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

அந்த குழுவினரால் முன்வைக்கப்படும் பரிந்துரைகள் பிரதமருக்கு கையளிக்கப்பட்டு பிரதமரினால் அது அமைச்சரவை அனுமதிக்காக அமைச்சர வை பத்திரமாக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதனையடுத்து அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: