சுகாதார ஆலோசனைகளை உரிய வகையில் பின்பற்றுங்கள் – பொதுமக்களிடம் சுகாதார அமைச்சர் வேண்டுகோள்!

Saturday, July 18th, 2020

 

பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை உரிய வகையில் பின்பற்றுவதன் ஊடாகவே, இலங்கையிலிருந்து கொரோனாவை முற்றாக அழிக்க முடியும் என சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி கூறியுள்ளதாவது, ”கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கான, 3700 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் இதுவரை செய்யப்பட்டுள்ளன.

இந்த பரிசோதனைகளின் அடிப்படையில், 443 கைதிகளும் 63 அதிகாரிகளும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 26 பேரும் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

அதற்கிணங்க, மொத்தமாக 530 பேரும் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். கடந்த 2 அரை மாதங்களாக நாட்டில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்படாமைக்கு பிரதான காரணமாக, மக்களின் ஒத்துழைப்பு தான் காணப்படுகிறது.

மக்களை நாம் மிகவும் கௌரவமளிக்கிறோம். நாம் கேட்டுக் கொண்டமைக்கு இணங்க, அனைவரும் சுகாதார ஆலோசனைகளை கடைபிடித்தார்கள். இதன் ஊடாகவே, சமூகத் தொற்றாக இந்த வைரஸ் பரவல் காணப்படவில்லை. இப்போது, கந்தக்காடு மத்திய நிலையத்தின் ஊடாக இந்த விடயத்தில் சற்று பின்னடைவொன்று ஏற்பட்டுள்ளது.

இவ்வேளையில் நாம் மக்களிடம் ஒன்றைக் கேட்டுக் கொள்ள விரும்புகிறோம். அதாவது, கடந்த காலங்களில் எமக்கு எவ்வாறு ஒத்துழைப்பு வழங்கினீர்களோ அதேபோல், இனியும் செயற்ட்டு அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இது இன்று உலகலாவிய ரீதியான சவாலாக காணப்படுகிறது. எனினும், இதனை எம்மால் கட்டுப்படுத்த முடியும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். மக்கள் எமக்கான ஒத்துழைப்பை வழங்கினால் மட்டும்தான் இதிலிருந்து நாம் மீண்டுவர முடியும்”  எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: