சீரற்ற காலநிலை தொடர்வதால் மிக அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவுறுத்து!

Wednesday, November 15th, 2023

சீரற்ற காலநிலை தொடர்வதால் மிக அவதானமாக இருக்குமாறு பொது மக்களிடம் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கோரியுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 94 குடும்பங்களை சேர்ந்த 317 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் 55 குடும்பங்களை சேர்ந்த181 நபர்களும், பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 9 குடும்பங்களை சேர்ந்த 36 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதே போன்று ஏனைய பிரதேச செயலர் பிரிவுகளிலும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாவும் எனினும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் இதன் பாதிப்புக்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் எனவும் சூரியராசா தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீரற்ற காலநிலை தொடர்வதால் பாதிப்புக்கள் ஏற்படலாமென்பதால் மிக  அவதானமாகவும் பாதுகாப்புடன் இருக்குமாறும் பொது மக்களை அனர்த்த முகாமைத்துவ பிரிவு கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று பெய்துவரும் கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதமடைந்து காணப்படுகின்றது.

கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கடும் மழையினால்  கிளிநொச்சி திருவையாறு குளம் அண்டிய பிரதேசங்களில் கடும்மழை பெய்ததனால் குளத்தின் மேலதிக நீர் வெளியேறி செல்லும் பிரதேசங்களான பண்ணங்கண்டி, பரந்தன் மத்தி, சிவபுரம், உமையாள்புரம் மற்றும் வினாசியோடு பகுதிகளில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை,  கிளிநொச்சி திருவையாறு குளத்தின் மேலதிக நீர் வெளியேற்றத்தினால் உள்ளூர் வீதிகளில் மழை நீர் குறுக்கறுத்து பாய்ந்து ஓடுவதால் வீதியில் பயணிப்போர் கடும் சிரமத்திற்கு மத்தியில் செல்வதை காணக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: