சீன உர சர்ச்சை – பயோடெக் நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் சேர்க்குமாறு தேசிய கணக்காய்வாளர் அலுவலகத்தின் பரிந்துரை!

Sunday, September 4th, 2022

சீனாவின் கிங்டாவோ சீவின் பயோடெக் (Qingdao Seawin Biotech) நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் சேர்க்குமாறு தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளது.

சேதன உரம் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் செயற்படாததன் காரணமாக இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

96,000 மெட்ரிக் டன் சேதன உரங்கள் கொள்முதல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கையில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் சீன நிறுவனத்தின் உரங்களின் மாதிரிகள் கிருமி நீக்கம் செய்யப்பட்டிருக்கவில்லை. அவை தீங்கு விளைவிக்கும் பக்டீரியாவைக் கொண்டிருப்பதாக தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவை அவதானித்துள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையின் அடிப்படையில், இறக்குமதிக்குத் தேவையான சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக,  விவசாய அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட விசேட பணிக்குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், உரிய உர இறக்குமதிக்கான நாணயக் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சீனாவின் உர வழங்குநரான, கிங்டாவோ சீவின் பயோடெக் (Qingdao Seawin Biotech) நிறுவனம், கடந்த 2021 செப்டம்பர் 23 அன்று, 20,550 மெட்ரிக் டன் உரத்தை கொழும்பு துறைமுகத்திற்கு அனுப்பியது.

மேலும் அவை தாவர தனிமைப்படுத்தல் சட்டத்தின்படி நுண்ணுயிரி நீக்கம் செய்யப்படாததால், அதனை இலங்கையில் தரையிறக்க முடியாது போனது.

இதனால் பெரும் சர்ச்சைஏற்பட்டது. பின்னர், உரத்தை இறக்குமதி செய்த இரண்டு அரச நிறுவனங்களான இலங்கை உரக் கம்பனி மற்றும் கொமர்ஷல் உரக் கம்பனி என்பன பணம் வழங்க மறுத்ததோடு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து கொடுப்பனவை நிறுத்துவதற்கான உத்தரவைப் பெற்றன.

இந்நிலையில், இராஜதந்திர முருகல் ஏற்பட்ட நிலையில், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் இணக்கப்பாட்டின் மூலம் தீர்வு காண, அமைச்சரவையின் அங்கீகாரத்துக்கமைய, கப்பலில் உள்ள உரத்தில் 75% இருப்புக்கான கட்டணமாக  6.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 1,382 மில்லியன் ரூபா) செலுத்தப்பட்டது.

அதன்படி, தேவையான கலவை மற்றும் தரம் கொண்ட உரங்களை அதே நிபந்தனைகளின்படி மீண்டும் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தொடர்புடைய வழக்கு மீளப் பெறப்பட்டது.

எனினும், இது வரையில், இந்த நாட்டுக்கு எதிர்பார்த்த தரமான உரம் எதுவும் சீன நிறுவனத்தினால் அனுப்பப்படவில்லை.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி,  நாணயக்கடிதம் மற்றும் உத்தரவாதப் பிணை (Performance bond)என்பவற்றின் செல்லுப்படியாகும் காலம் நீடிக்கப்பட்டு செல்லுபடியாகும் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

எனினும், அவை முறையே கடந்த மார்ச் 12 மற்றும் மார்ச் 24ஆகிய திகதிகளில் காலாவதியாகிவிட்டன.

அதன் காரணமாக மீண்டும் தரப்படுத்தப்பட்ட உரத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்கவில்லை. இதனால் அதற்காக செலுத்தப்பட்ட பணத்தை மீளப்பெறும் திறனை இலங்கை இழந்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் உரத்துக்காக செலுத்திய தொகை முழுவதும் அரசுக்கு நஷ்டமாக மாறியுள்ளது.

இதன்படி, அது தொடர்பான பத்திரங்களை காலாவதியாகும் முன் பணமாக்குதல் அல்லது அவற்றின் காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்காமை மற்றும் முன்பண செலுத்தலின்போது எந்தவித பாதுகாப்பும் இன்றி நிதியை விடுவிக்காதமை ஆகியவற்றின் காரணமாக அரசுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை, இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பொறுப்புகூறவேண்டியவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து வசூலிக்குமாறு கணக்காய்வாளர் நாயகம் பரிந்துரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0000

Related posts: