சீனா தனது அரசியல் கருத்துக்களை உலகின் மத்தியில் திணிக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, July 7th, 2021

சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்ற கருத்துக்களை மதிக்கும் மக்கள் இலங்கையில் வாழ்கின்றமையாலேயே சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் எங்களால் உறவுகளைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது என்று தான் மகிழ்வடைவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு பூர்த்தியை முன்னிட்டு நானும், எனது நாட்டு மக்கள் சார்பிலும் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரலாற்று ரீதியாக சீனா எம்முடன் கொண்டுள்ள உறவு குறித்த  மரியாதையும் அந்த வாழ்த்துக்களுக்குள் உள்ளடங்குகிறது என்றும் நான் கூற வேண்டும். சீனா எமது வரலாற்று நட்பு நாடாகும். அந்த நீண்ட வரலாற்றில் சீனா எம்முடன் செயற்பட்டுள்ள விதத்திற்கு அமைய சீனா எமக்குள்ள உண்மையான நண்பர் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாகவும், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவை அங்கீகரிப்பதற்காக ஒரு நினைவு நாணயத்தை வெளியிடவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

தற்போது சீன கம்யூனிஸ்ட் கட்சியே உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாகும். அந்த அரசியல் கட்சியின் வெளிநாட்டு உறவுகள் குறித்த கொள்கைக்கு அமைய 70 ஆண்டுகளாக உலகிற்கு மிக முக்கியமான செய்தியை வழங்கியுள்ளது என்று நான் கூற வேண்டும்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியுறவுக் கொள்கை நிலைப்பாடுதான் சீனாவை உலக அரங்கிற்கு உயர்த்தியது என்பது எனக்குத் தெரியும். இருப்பினும், சீனா தனது அரசியல் கருத்துக்களை உலகின் மத்தியில் திணிக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை.

அதேவேளை, பிற நாடுகளின் விவகாரங்களை தாம் ஒழுங்குறுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்ற உணர்வை சீனா ஒருபோதும் கொண்டிருக்கவில்லை. சீனா தனது சொந்த அடிப்படையில் பிற நாடுகளுக்கு உதவியது. ஒரு நாட்டின் சுதந்திரத்திற்கும் இறையாண்மைக்கும் இது மிகவும் முக்கியமானது. அந்த நாடுகளுக்கு தங்கள் சுதந்திரத்தை பேணி செயற்பட அனுமதித்ததனால் உலக நாடுகள் சீனாவுடன் வர்த்தகம் செய்ய தயங்கவில்லை. இலங்கையும் அதே போன்றுதான்.

அதனால்தான் உலகின் பல கதவுகள் சீனாவுக்கு திறக்கப்பட்டன. சர்வதேச அளவில் சீனாவின் முன்னேற்றத்திற்கு அந்தக் கொள்கை மிகவும் முக்கியமானதாகும். அடுத்த நூற்றாண்டில் ஆசியாவில் எழுச்சியை சீனா வழிநடத்தும் என்பது தற்போது யதார்த்தமாகிவிட்டது.

நாட்டில் வர்க்கப் பிளவுகளை ஏற்படுத்தும் நாட்டை பலவீனப்படுத்தும் ஒன்றாக அன்றி திறந்த பொருளாதாரத்தை சீனா ஏற்றுக்கொண்டது. சீனா தனது திறந்த பொருளாதாரக் கொள்கையின் கீழ் சீனாவில் தொள்ளாயிரம் மில்லியன் மக்களின் வறுமையை ஒழித்துள்ளது. திறந்த பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சி உலகிற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக உள்ளது..

உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் மக்களுக்கு புதிய பாதைக்கு வழிவகுத்து மக்களின் பலம் வெளிப்படும் என சீனா நம்பியது. எனவே, நம் நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சீனாவிற்கு எப்போதும் அழைப்புவிடுத்துள்ளோம்.

சீனாவின் முதலீடுகளை கொண்டு பயன்பெறும் பட்டுப் பாதையின் நாடுகளும் இதுபோன்ற கொள்கைகளுடன் செயற்படுவது அவசியமாகும் என்று தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச சினோஃபார்ம் தடுப்பூசியை உருவாக்கி உலகிற்கு தாராளமாக நன்கொடை அளித்தமைக்காக சீனாவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதனை உலகத்துடன் பகிர்ந்து கொண்டு கம்யூனிஸ்ட் கட்சி உலகிற்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகின்றது என்று நான் கூற வேண்டும்.

செல்வந்தர் ஏழை என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்பது இந்த தொற்றுநோயை எதிர்கொள்ளும் உலக சுகாதார அமைப்பின் குறிக்கோளாகும்.

அது மட்டுமல்லாமல், சீனா ஆய்வு செய்துள்ள தடுப்பூசியை எங்களைப் போன்ற நாடுகள் தயாரிப்பதற்கு தேவையான அனுமதியையும் அளித்துள்ளது.

இது போன்ற ஒரு உலகளாவிய தொற்றுநோய் சூழலில் சீன கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கும் முடிவுகள் மனிதர்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவுகளாக கருதப்படுகின்றன என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

000

Related posts: