சீனாவின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைத்தது – உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!

Saturday, May 8th, 2021

சீன அரசாங்கத்தின் மருந்துத் தயாரிப்பு நிறுவனமான சினோபார்ம் கொரோனா தடுப்பூசிக்கு அவசரகாலப் பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்குவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன், தொற்று நோய் ஒன்றுக்கான சீனத் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசரகால பயன்பாட்டு ஒப்புதல் அளித்தது இதுவே முதல்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மேற்கத்தேய நாடுகளுக்கு வெளியே உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிக்கு முதல் அங்கீகாரம் சீனத் தடுப்பூசிக்குக் கிடைத்துள்ளது.

சினோபார்ம் தடுப்பூசி, ஏற்கனவே சீனாவிலும் சீனாவின் சில நட்பு நாடுகளிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், தற்போது உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைத்த நிலையில் ஏனைய நாடுகளுக்கும் விநியோகிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கும் உலகளாவிய திட்டமான கொவான்ஸ் திட்டத்தில் சினோபார்ம் தடுப்பூசியையும் சேர்ப்பதற்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இதேவேளை, ஃபைசர் பயோஎன்டெக், அஸ்ட்ராசெனேகா, ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசிகளுக்கும் கடந்த வாரம் மொடேர்னாவின் கொரோனா தடுப்பூசிக்கும் உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: