சில பிரதேசங்களுக்குள் வரையறுக்கப்பட்டுள்ள கழிவு நீர் முகாமைத்துவம் நாட்டின் அனைத்து நகரங்களையும் சென்றடையும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, November 18th, 2021

சில பகுதிகளில் மாத்திரம் காணப்படும் கழிவு நீர் முகாமைத்துவ முறைமை நாட்டின் ஒவ்வொரு பிரதான நகரங்களிலும் உருவாக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையிலிருந்து தொலைக்காணொளி ஊடாக கண்டி நகர்ப்புற கழிவு நீர் முகாமைத்துவ திட்டத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு தேசிய சுகாதாரத் திட்டத்தை உருவாக்க முடிந்ததில் தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்

தெற்காசிய பிராந்தியத்தை எடுத்துக் கொண்டால் சுகாதார வசதிகள் மற்றும் பயன்பாட்டில் நாங்கள் இன்னும் முன்னணியில் இருக்கிறோம். எவ்வாறாயினும், எமது சொந்த செயற்பாடுகளினால் எமது நாட்டில் உள்ள பல நீர் ஆதாரங்கள் தற்போது மாசடைந்து வருகின்றன.

அதனால்தான் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ‘சுகாதாரம் தொடர்பான தேசிய திட்டத்தை’ உருவாக்கியது. அதன்படி, எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக ‘கழிவுநீர் முகாமைத்துவ அமைப்புகளை’ உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம்.

உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகள் கூட கழிவு நீர் முகாமைத்துவ பிரச்சனையை எதிர்நோக்கி வருகின்றன. வீடுகள், வணிகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை நிர்வகிப்பது எளிதல்ல.

மக்களின் சுகாதாரத்தை முதன்மைப்படுத்தும் இத்தகைய தேசியத் திட்டம் செயல்படுத்தப்படுவதை எதிர்கால முதலீடாக பார்க்கிறோம். இந்த வேலைத்திட்டம் 2030 வரை செயற்படுத்தப்படும் என அமைச்சர் வாசுதேவ என்னிடம் தெரிவித்தார்.

கண்டி நகர்ப்புற கழிவு நீர் முகாமைத்துவ திட்டத்திற்கான ஆரம்ப நிதியை ஜய்கா நிறுவனம் வழங்கியுள்ளது. அவர்களுக்கும் ஜப்பானிய அரசாங்கத்திற்கும் நாம் நன்றி கூற வேண்டும்.

அதேவேளை நாட்டின் சில பிரதேசங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த கழிவுநீர் மகாமைத்துவ அமைப்புகளை எதிர்காலத்தில் நாட்டின் அனைத்து பிரதான நகரங்களிலும் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என பிரதமர் தெரிவித்தார்.

00

Related posts: