சிறுவர் போசாக்கின்மை – அரச நிறுவனங்கள் முன்வைத்துள்ள புள்ளிவிபர அறிக்கைக நாட்டின் உண்மை நிலைமையை புலப்படுத்தாது – நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சுட்டிக்காட்டு!

Wednesday, November 1st, 2023

சிறுவர் போசாக்கின்மை தொடர்பில் அரச நிறுவனங்கள் முன்வைத்துள்ள புள்ளிவிபர அறிக்கைகளிலிருந்து நாட்டின் உண்மை நிலைமை புலப்படுவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா? என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அடையாளங் காணப்பட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவது தொடர்பில் மேற்பார்வை செய்வதற்குமான நாடாளுமன்ற விசேட குழு அதன் தலைவர் வடிவேல் சுரேஷ் தலைமையில் கூடியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரச நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் குறித்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

போசாக்குத் தேவையுடைய பிள்ளைகளை சரியாக இனங்கண்டு அறிக்கை சமர்ப்பிக்கவும் அவர் இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பெருந்தோட்டங்களிலுள்ள கர்ப்பிணி பெண்கள் மத்தியில் காணப்படும் மன உளைச்சல் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் நேரடியாகத் தாக்கம் செலுத்துவதாகவும் குறித்த நாடாளுமன்ற விசேட குழு தெரிவித்துள்ளது.

சிறுவர் போசாக்கின்மை தொடர்பிலான உண்மையான தகவல்களை பாதீட்டு திட்டத்துக்கு முன்னர் குழுவுக்கு சமர்ப்பிக்குமாறும், அதன் மூலம் சிறுவர் போசாக்கின்மையை ஒழிப்பது தொடர்பான பொதுவான பிரேரணையொன்றை நாடாளுமன்றத்துக்கு முன்வைக்க சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் அதிகாரிகளுக்கு இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் திரிபோஷா வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் இதன்போது விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது 6 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு திரிபோஷா வழங்கப்படுவதில்லை எனவும் 3 முதல் 5 வயது வரையிலான சிறுவர்களுக்கு மாத்திரமே திரிபோஷா வழங்கப்படுவதாகவும் இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

6 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கான திரிபோஷா உற்பத்தியில் உரிய அளவுகோல்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக அவர்களுக்கு திரிபோஷா தயாரிக்கப்படுவதில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், சுகாதார அமைச்சினால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்பட்டதன் பின்னர், அந்த வயதினருக்கும் திரிபோஷாவை உற்பத்தி செய்ய முடியும் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இந்தநிலையில் விநியோகிக்கப்படும் திரிபோஷா, கஷ்டப் பிரதேசங்களிலுள்ள தேவையுடைய மக்களுக்கு சரியான முறையில் விநியோகிக்கப்படுகிறதா? என நாடாளுமன்ற விசேட குழுவின் தலைவர் வடிவேல் சுரேஷ் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கமைய, போசாக்குத் தேவையுடைய பிள்ளைகளை உரிய முறையில் இனங்கண்டு, தேவையுடைய பிள்ளைகளுக்கு திரிபோஷா விநியோகிக்கப்படுவது தொடர்பில் மேற்பார்வை செய்யப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: