சிறுவர்கள் குறித்து தேசிய கொள்கையொன்றைத் தயாரிப்பதை விரைவுபடுத்தவும் – கோபா குழு வலியுறுத்து!

Monday, May 30th, 2022

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஊடாக இந்நாட்டு சிறுவர்கள் தொடர்பில் தேசிய கொள்கையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பில் உரிய வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) வலியுறுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மாகாண சபைகளுக்கு நிதி வழங்குகையில் எவ்வித பாகுபாடுமின்றி நிதி வழங்குவதற்கு அமைச்சு தலையிட வேண்டும் என்றும் கோபா குழு அண்மையில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், தேசிய கொள்கையைத் தயாரிக்கையில் சகல நீதிமன்ற வலயங்களுக்குள்ளும் நன்நடத்தை அலுவலகமொன்றை நிறுவுவது தொடர்பாகவும் கவனம் செலுத்துமாறும் குழு இந்த அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

சிறுவர்கள் தொடர்பாக ஏற்புடையதாகின்ற சிறுவர் மகவேற்புக் கட்டளைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் மற்றும் கட்டளைச் சட்டங்களைத் திருத்தும் தேவைப்பாடுகளைச் சுட்டிக்காட்டிய கோபா குழு, இந்தச் சட்டமூலங்களை காலத்துக்கு ஏற்ற வகையில் திருத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தது.

இந்தக் கட்டளைச் சட்டங்களைத் திருத்துவதற்கான வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், சிறுவர்கள் மற்றும் இளம் ஆட்கள் கட்டளைச் சட்டம் தொடர்பான சட்டத் திருத்தப்பணிகள் இறுதிக் கட்டத்தில் காணப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

இணையத்தள பயன்பாடு காரணமாக சிறுவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகின்ற துஷ்பிரயோகங்களிலிருந்து அவர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க உரிய செயன்முறையொன்றை நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தயாரிக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிறுவர் சார்ந்த குற்றங்கள் தொடர்பான சம்பவங்களை அறிக்கையிடுகையில் ஊடகங்கள் மேற்கொள்ளும் முறைகேடுகளைத் தடுக்க சமூகநேய ஊடகத் தணிக்கையொன்றை ஏற்படுத்தும் வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்குமாறும் குழு பணிப்புரை வழங்கியது.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்குப் நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலையீட்டின் சார்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கையை அதன் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண கடந்த 20 ஆம் திகதி சமர்ப்பித்திருந்தார். அந்த அறிக்கையிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை தீர்க்க இளம் தொழில் நிபுணர்களிடமிருந்து ஜனாதிபதியிடம் மு...
கடன் வழங்குனர்களுடனான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது - நிதி இராஜாங்க அ...
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை!