கொரோனா பாதிப்பு குறித்து போலியான தரவுகள் வெளியிடப்படவில்லை – நவம்பர் மாதத்திற்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Friday, August 27th, 2021

சுகாதார அமைச்சினால் எந்த சந்தர்ப்பத்திலும் போலியான தரவுகள் வெளியிடப்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சில தொழிநுட்ப மற்றும் கால தாமதம் காரணமாக ஏற்படும் சிறு மாற்றங்கள் தொடர்பில் சிலர் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொழிற்சங்க உறுப்பினர்கள் சிலருடன் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை தெளிவுபடுத்தியுள்ளார்.

இதேவேளை, தொற்றா நோய்களுக்கு சிகிச்சைப் பெற்று வரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாவும், அவர்கள் அனைவருக்கும் விரைவில் இரண்டு தடுப்பூசி டோஸ்களையும் செலுத்தவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

எதிர்வரும் நவம்பர் மாதம் நிறைவடைவதற்குள் 18 வயதிற்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்கும் முழுமையாக தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் நிறைவு செய்யப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கியூப தூதுவரை  சந்தித்து கலந்துரையாடிய போதே அவர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் செப்ரெம்பர் மாத நடுப்பகுதியில் 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகள் நிறைவுறுத்தப்படும்.

நாட்டின் சகல பிரஜைகளுக்கும் முழுமையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதை அடுத்து 3ஆம் தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை எதிர்காலத்தில் வீடுகளுக்கு சென்று அன்டிஜென் பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில்

பொதுமக்கள் அநாவசியமாக ஒக்ஸிஜன் சிலிண்டர்களை சேமித்து வைப்பது ஒரு தவறான நடவடிக்கை என்று ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும், நோயாளிக்கு அதிகமாக ஒக்ஸிஜன் வழங்குவதனாலும், நிமோனியா நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: