கடன் வழங்குனர்களுடனான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Monday, November 7th, 2022

இலங்கையின் கடன் வழங்குனர்களுடனான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சட்ட ஆலோசகர்கள், நிதி ஆலோசகர்கள் மற்றும் சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட முக்கிய கடன் வழங்குநர்கள் கலந்துரையாடலில் இணைந்திருந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கும் நாட்டின் கடனை மறுகட்டமைப்பதற்காகவும் மார்ச் மாதத்தில் இருந்து பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன.

இந்த நிலையில், அனைத்து கடன் வழங்குநர்களுடனும் வெளிப்படைத்தன்மையுடன் கையாள்வதற்கு இலங்கை இணங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியும் நிதியமைச்சும் கடன் வழங்குநர்களுடன் இணைந்து அவர்களுக்கு தேவையான தகவல்களையும் தெளிவுபடுத்தல்களையும் வழங்குவதாகத் தெரிவித்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தனது கடனாளிகளிடமிருந்து உறுதிமொழியைப் பெற்றவுடன், சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அதன் அனுமதியை வழங்கும் என்றும் இந்த செயன்முறைக்கு இந்த விவாதங்கள் இன்றியமையாதவை என்றும் அவர் கூறியுள்ளார்.

2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற இலங்கை எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 000

Related posts: