சிறுபோக நெல் தொகைக்காக விவசாயிகளுக்கு செலுத்த வேண்டியிருந்த 250 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டது – கமத்தொழில் அமைச்சு தெரிவிப்பு!

Saturday, September 3rd, 2022

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்யப்பட்ட சிறுபோக நெல் தொகைக்காக விவசாயிகளுக்கு செலுத்த வேண்டியிருந்த 250 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாயிகளிடம் இருந்து சிறுபோக நெல்லை கொள்வனவு செய்யும் பணிகளை நெல் சந்தைப்படுத்தல் சபை கடந்த மாதம் 15 ஆம் திகதி ஆரம்பித்தது.

இதற்கமைய 15 நாட்களுக்குள் 7 ஆயிரத்து 35 மெட்ரிக் தொன் நெல்லை ஆகக்குறைந்த உத்தரவாத விலைக்கு நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்துள்ளது.

ஒரு கிலோ கிராம் நாட்டு நெல்லை 120 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் சம்பா நெல்லை 125 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் கீரி சம்பா நெல்லை 130 ரூபாவிற்கும் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நெல் கொள்வனவிற்காக அமைச்சரவை அனுமதிக்கு அமைய அரசாங்கத்தினால், பணத்தை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், ஏற்பட்ட சிக்கல் நிலைமையினால் விவசாயிகளுக்கு பணத்தை வழங்குவது சில நாட்களுக்கு தாமதமானது.

குறித்த பணம் விரைவாக வழங்கப்படும் எனவும், அதற்காக பொறுமையுடன் இருக்குமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர விடுத்த கோரிக்கைக்கு அமைய, விவசாயிகள் பணம் கோரி எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

விடுவிக்கப்பட்டுள்ள 250 மில்லியன் ரூபாவை 108 மில்லியன் ரூபா என்ற அதிக அளவான தொகை அம்பாறை மாவட்டத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக கமத் தொழில் அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: