சிறுகுற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனைக் காலம் அதிகரிப்பு!!

Saturday, January 5th, 2019

சிறு குற்றங்கள் செய்தவர்களுக்கு மன்றங்கள் வழங்கும் சமுதாயப் பணிக்கான தண்டனைக் காலத்தைச் சாவகச்சேரி நீதிமன்று இந்தவருடம் தொடக்கம் அதிகரித்துள்ளது. முன்னர் இருந்த தண்டனைக்காலத்தை சிறு குற்றங்கள் செய்தவர்கள் அனுபவித்தபோதும் அவர்கள் எந்தளவுக்கு திருந்தி நடக்கின்றனர் என்பது குறித்து கேள்வி எழுப்பப்படுவதால் தண்டனைக்காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் ஆறு மாதங்களில் 80 மணித்தியாலங்கள் தொடக்கம் 120 மணித்தியாலங்கள் வரை சமுதாயப் பணி மேற்கொள்ள வேண்டுமென்று உத்தரவு உள்ளது. முன்னர் வெளியான அரசிதழ் அறிவிப்பின்படியே இந்தத் தண்டனை வழங்கப்படுகின்றது. அத்தகையை தண்டனைக்காலமே தற்போது 300 மணித்தியாலங்கள் வரை அதிகரி;க்கப்பட்டுள்ளது. சிறுகுற்றம் புரிந்தவர்களைச் சமுதாயப் பணிகளில் ஈடுபடுத்த முடியும் என்பதன் அடிப்படையில் சமுதாயச் சீர்திருத்தப் பிரிவு இதை நடைமுறைப்படுத்துகிறது. இதற்கென்று நீதிமன்றங்களில் அதிகாரிகள் உள்ளனர்.

சாவகச்சேரியில் மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு நீதிமன்று நேற்று 300 மணித்தியாலங்கள் சமூகப் பணி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

சட்டவிரோதமாகக் கசிப்பு வைத்திருந்த ஒருவருக்கு 250 மணித்தியாலங்களும் இதே குற்றம் புரிந்த மற்றொருவருக்கு 150 மணித்தியாலங்களும் சமூகப் பணி செய்ய வேண்டும் என்று நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கொடிகாமம் பொலிஸார் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். அவர்களை அதிகநேரம் சமூகப்பணியில் ஈடுபடுத்துமாறும் நீதிமன்று சமுதாயம் சார் சீர்திருத்தப் பிரிவுக்குப் பணித்துள்ளது.

Related posts: