சிறப்புத் தேவையுடையவர்கள் மற்றொரு நபரின் உதவியைப் பெற அனுமதிக்கப்படுவர் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Sunday, July 5th, 2020

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச் சீட்டுத் தொடர்பில் அறிந்துகொள்ள பார்வை குறைபாடுள்ள அல்லது சிறப்புத் தேவையுடைய ஒருவர் மற்றொரு நபரின் உதவியைப் பெற அனுமதிக்கப்படுவார் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஆகஸ்ட்  5ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு வேறுபாடும் இல்லாமல் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்“சிறப்புத் தேவையுடையோருடன் வருபவர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும், நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக இருக்கக்கூடாது, அங்கீகரிக்கப்பட்ட முகவராக செயல்படாத ஒருவராக இருக்கவேண்டும், சுயேட்சைக் குழுவின் தலைவராக இருக்கக் கூடாது, அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு அரசியல் கட்சியின் வாக்களிப்பு நிலைய முகவராக உள்ளவராக இருக்கக் கூடாது.

சிறப்புத் தேவையுடைய வாக்காளர் வாக்குச் சாவடிக்கு உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது வாக்குச் சாவடியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறு எந்த அடையாள ஆவணத்துடனும் தகுதிச் சான்றிதழுடன் வாக்காளருக்கு உதவ பெயரிடப்பட்ட நபருடன் செல்ல வேண்டும்.

எந்தவொரு சிறப்புத் தேவையுடைய வாக்காளரும் ஒரு நபரை உதவ அழைத்து வர முடியாவிட்டால், அந்த நபர் வாக்குச் சாவடியின் மூத்த தலைமை அதிகாரி மூலம் வாக்களிக்க முடியும்” – என்றுள்ளது

Related posts: