சாரணர் ஜம்போரி – அமெரிக்கா செல்லும் இலங்கை சாரணர்கள் !

Wednesday, July 17th, 2019

அமெரிக்காவில் இடம்பெறும் உலக சாரணர் ஜம்போரியில் பங்குபற்றும் இலங்கை சாரணர் அணிக்கு உத்தியோகபூர்வமாக தேசியக் கொடியை கையளிக்கும் நிகழ்வு நாட்டின் தலைமை சாரணரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (16) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது சாரணர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையின் தனித்துவத்தை உலகிற்கு கொண்டு செல்வதற்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பம் எனக் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து சாரணர்களுடன் சுமூகமாகக் கலந்துரையாடிய ஜனாதிபதி, பாடசாலை காலத்தில் தான் ஒரு சாரணராக செயற்பட்டு பெற்றுக்கொண்ட அனுபவங்களை நினைவு கூர்ந்ததுடன், அதில் பெற்ற அனுபவங்கள் ஜனாதிபதி பதவியை வகிப்பதற்கும் தனக்கு பெரிதும் உதவியதாக குறிப்பிட்டார்.

குறிப்பாக இந்த ஜம்போரியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க தூதரகத்தினால் விசா கிடைக்கப்பெறாத பிள்ளைகளுக்கு விசாவை பெற்றுக் கொடுக்குமாறு அமெரிக்க தூதுவருக்கு தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அனைத்து சாரணர்களுக்கும் ஜனாதிபதி இதன்போது வாழ்த்து தெரிவித்ததுடன், அவர்களுடன் குழுவாக புகைப்படத்திற்கும் தோற்றினார்.

24 வது உலக சாரணர் ஜம்போரி ஜூலை மாதம் 21 ஆம் திகதி முதல் ஒருவார காலத்திற்கு அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினியாவில் நடைபெறுவதுடன், இதில் இலங்கை சாரணர் இயக்கத்தின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கு பற்றவுள்ளனர்.

ஜம்போரி காலப்பகுதியில் இலங்கை பற்றிய விசேட சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சாரணர் ஆணையாளரினால் ஜனாதிபதி, அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதியினால் இலங்கை அணியின் தலைவர் சர்வதேச ஆணையாளர் சட்டத்தரணி கபில கல்யாண பெரேராவிடம் தேசியக் கொடி கையளிக்கப்பட்டதுடன், தலைமை சாரணர் ஆணையாளர் பொறியியலாளர் மெரின் குணதிலக்க உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related posts: