சாதாரண மக்களின் பட்டினியை போக்க நிவாரண பொதி வழங்க ஏற்பாடு – அமைச்சர் பந்துல நடவடிக்கை!

Friday, August 20th, 2021

அத்தியாவசிய 20 பொருட்கள் அடங்கிய பொதியொன்றை நிவாரண நிலையில் சதொச ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ள வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன 1998 என்ற துரித இலக்கத்துக்கு தொடர்புகொண்டு வீடுகளுக்கே இலவசமாக கொண்டுவந்து கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது  தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக தொற்று நிலைமையில் மக்களின் வாழ்வாதார செலவும் அதிகரித்திருக்கின்றது. இவ்வாறான நிலைமையில் அரசாங்கம் என்ற வகையில் சாதாரண மக்களின் பட்டினியை போக்குவதற்காக நிவாரண விலையில் விநியோகிப்பதற்கு அத்தியாவசிய 20 பொருட்கள் அடங்கிய பொதியொன்றை சதொச நிறுவனம் ஊடாக தயாரித்திருக்கின்றோம்.

நிவாரண பொதியில் வெள்ளைபச்சை அரிசி 2 கிலோ, சிவப்பு பச்சை 1 கிலோ, நாட்டரிசி1 கிலோ, கோதுமா மா 1 கிலோ, நூடில்ஸ் 400 கிராம், வெள்ளை மற்றும் சிவப்பு சீனி 1 கிலோ, 100 கிராம் அடங்கிய மசாலா தூள் வகைகள், சவர்க்கார வகைகள் உட்பட 20 பொருட்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

மேலும் நிவாரண பொதியில் இருக்கும் பொருட்களை ஏனைய வர்த்தக நிலையங்களில் பெற்றுக்கொண்டால் சுமார் 6,600 ரூபா செலவாகும். ஆனால் நாங்கள் நிவாரண அடிப்படையில் 1998 ரூபாவுக்கு விநியோகிக்கின்றோம்.

அத்துடன் இந்த நிவாரண பொதியை வீடுகளுக்கே கொண்டுவந்து கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அதற்காக உங்கள் தொலைபேசியில் 1998 என துரித இலக்கத்துக்கு அழைத்து அதற்கான பதிவை மேற்கொள்ளவேண்டும். உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் சதொச நிறுவனத்தினூடாக இலவசமாக கொண்டுவந்து தரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: