சாதாரண தரப் பரீட்சைக்காக வடக்கில் இலவசக் கருத்தரங்குகள்!

Tuesday, August 7th, 2018

எதிர்வரும் டிசம்பர் மாதம் க.பொ.த (சா.த) பரீட்சைக்குத் தோற்றும் வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மொழி மூல மாணவர்களுக்கு உதவும் நோக்குடன் இலவசக் கல்விக் கருத்தரங்குகள் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

சட்டத்தரணி தேவசேனாதிபதி தலைமையில் நடைபெறும் இலவசக் கருத்தரங்கில் பிரதம அதிதிகளாக வடக்கு, கிழக்கு விசேட அபிவிருத்தி செயலணியின்  செயலாளரும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளருமான வி.சிவஞானசோதி, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் சுந்தரேஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

காலை 8.30 தொடக்கம் மாலை 3.30 வரை நடைபெறும் கருத்தரங்குகள் முறையே எதிர்வரும் 9 ஆம் திகதி வியாழக்கிழமை ஊர்காவற்றுறைப் பிரதேசசெயலக மண்டபத்திலும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழில்நுட்பக் கல்லூரி மண்டபத்திலும் 11, 12, 13 (சனி, ஞாயிறு, திங்கட்கிழமை) ஆகிய தினங்களிலும் யாழ் வீரசிங்கம் மண்டபத்திலும் காலை 6 மணி தொடக்கம் மாலை 3 மணி வரை நடைபெறும்.

மேலும் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி கூட்டுறவுச் சங்க மண்டபத்திலும் 15 ஆம் திகதி புதன்கிழமை முல்லைத்தீவு கற்சிலைமடு அ.த.க பாடசாலை மண்டபத்திலும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை மன்னார் நகர சபை மண்டபத்திலும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வவுனியா நகர சபை மண்டபத்திலும் காலை 8 மணி தொடக்கம் மாலை 3 மணி வரை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இலவசக் கல்விக் கருத்தரங்கில் கணிதம், விஞ்ஞானம், தமிழ், வரலாறு, ஆங்கிலம், வணிகக்கல்வி ஆகிய பாடங்களுக்கான விரிவுரைகளை வளவாளர்கள் வசந்தன், மணிமாறன், சுந்தரேஸ்வரன், பிரேம்குமார், மகேந்திரன், இளமுருகன், தேவசேனாதிபதி, நடராஜா, லிங்கேஸ்வரன் ஆகியோர் வழங்குவார்கள். மாணவர்களுக்கு பாடக் குறிப்புகளும் கடந்தகால வினாவிடைப் புத்தகங்களும் இலவசமாக வழங்கப்படும். இந்த இலவசக் கல்விக் கருத்தரங்குகளில் பிரதேச மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற முடியும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கலந்துகொள்ள விரும்பும் பாடசாலைகள் 077 113 3400 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

Related posts: