சவுதி நிதியத்தால் கிடைத்துவந்த பணம் மட்டுமே தொடர்ந்தும் கிடைத்து வருகிறது – அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Thursday, November 30th, 2023

எமது நாட்டுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட ஏனைய நாடுகளின் நிதியங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் சவூதி நிதியத்தால் எமக்கு கிடைத்துவந்த பணம் நிறுத்தப்படாமல் எமக்கு கிடைத்து வருகிறது. அதற்காக நாங்கள் சவூதி அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்கிறோம் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிததுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (29) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான  ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் ரிஷாத் பதியுதீன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது ரிஷாத் பதியுதீன் எம்.பி. தெரிவிக்கையில் –

மன்னார் புத்தளம் வீதி நூறு வருடங்களுக்கு முன்னர் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட வீதியாகும். 2009 இல் யுத்தம் முடிந்த பின்னர் திறந்துவைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த பாதை வழியாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு வருகின்றபோது நூறு கிலோமிட்டர் குறைவான தூரத்தில் வரலாம்.

இவ்வறு வந்துபோகும்போது 200 கிலோ மீட்டர் தூரம் குறைவாக வந்துபோகலாம். நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் இது மிகவும் உதவியாக இருக்கிறது.

இந்த பாதையை நாங்கள் அரசாங்கத்தில் இருக்கின்றபோது கார்பட் இட்டு புதுப்பிக்கும்போது சில அரச சார்பற்ற நிறுவனங்கள் வெளிநாடுகளிடமிருந்து உதவி பெற்று வழக்கு தொடுத்தார்கள்.

இதேவேளை சவூதி நிதியத்தின் எஞ்சிய பணத்திலாவது இதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால் இது தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்தி இந்த பாதையை மக்கள் பாவனைக்காக திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கு அமைச்சர் பந்துல குணவர்த்தன தொடர்ந்து பதிலளிக்கையில்,

அனைத்து வீதி அபிவிருத்திகளும் ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் உதவியிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால்  இந்த கடன்கள் தற்போது பூரணமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன. கடன் மறுசீரமைப்புக்கு பின்னர் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்த முடியும்.

அத்துடன் சவூதி நிதியத்தின் எஞ்சிய பணமும் தற்போது நிறைவடைந்துள்ளது. அதனால் வடக்கு கிழக்கு மாத்திரமின்றி சவூதி நிதியம் மூலம் ஏனைய மாகாணங்களுக்கும் அதிகமான உதவிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதனால் எதிர்வரும் காலத்தில் சவூதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள இருக்கிறோம்.

அத்துடன் ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட ஏனைய நாடுகளின் நிதியங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் சவூதி நிதியத்தால் எமக்கு கிடைத்துவந்த பணம் நிறுத்தப்படாமல் எமக்கு கிடைத்து வருகிறது. அதற்காக நாங்கள் சவூதி அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: