சவால்கள் தொடர்பில் தெரியாமல் ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்கவில்லை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டு!

Wednesday, February 22nd, 2023

நாட்டில் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு முறையான திட்டம் வகுக்கப்பட வேண்டுமெனவும், தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள பொருளாதார வேலைத்திட்டத்தின் காரணமாக கடந்த சில மாதங்களாக இருந்த பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறைந்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இவ்வாறு வீழ்ச்சியடைந்த நாட்டிற்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியத்தை தவிர உலகில் வேறு எந்த நிறுவனமும் இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு மாற்று முன்மொழிவுகள் இருப்பின், அவற்றை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிப்பதற் கான வாய்ப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்..

மேலும் சில அரசியல் கட்சிகள் இதற்கான முன்மொழிவுகளை முன்வைக்காமல் மக்களிடம் பொய் சொல்லி அரசியல் நாடகம் ஆடுவதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்துடன் எவருக்கும் விளையாட முடியாது எனவும் வலியுறுத்தினார்.

இந்த சவால்கள் தொடர்பில் தெரியாமல் தான் ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்கவில்லை எனவும், தடைகள் வந்தாலும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை நிறுத்தப் போவதில்லை எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்..

மேலும் எங்களிடம் எரிபொருள், மின்சாரம், மருந்து எதுவும் இல்லை. ஒரு நாடு என்ற வகையில் நாம் மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டோம். நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கியது.

நான் ஜனாதிபதியாக பதவியேற்கும் போது இவ்வாறானதொரு பிரச்சினைக்குரிய சூழல் நாட்டில் இருந்தது. ஆனால் முறையான திட்டத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். மேலும், விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் வழங்கப்பட்டன. சரியான நேரத்தில் உரங்களை வழங்கியதால், இந்த முறை பெரும்போகத்தில் வெற்றிகரமான அறுவடை கிடைத்துள்ளது.

இப்போது எரிபொருள் வரிசைகள் இல்லை. மின்சாரம் உள்ளது. அதன்படி, நாட்டின் பொருளாதாரத்தை முந்தைய நிலையை விட படிப்படியாக சிறந்த நிலைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்று பணவீக்கம் உயர்ந்துள்ளது. வட்டி விகிதம் மிக அதிகம். அதனால், வர்த்தக சமூகம் சிரமங்களை எதிர்நோக்குவதை நாம் அறிவோம். சட்டத்தரணிகளும் தங்கள் பணியை மேற்கொள்வதில் சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. நாட்டின் பல அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கியுள்ளோம் என்றே கூற வேண்டும். மேலும் பல பிரச்சினைகள் நமக்கு முன்னால் உள்ளன.

ஒரு நாடு வங்குரோத்தடையும் போது, சர்வதேச நாணய நிதியத்திடம் தான் செல்ல வேண்டும். அதைத் தவிர, ஒரு நாடு வங்குரோத்தடையும் போது உதவி செய்யும் வேறு எந்த அமைப்பும் உலகில் இல்லை. பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த ஒவ்வொரு நாடும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியே மீண்டு வந்துள்ளது. சரிந்த பொருளாதாரத்தில் இருந்து கிரீஸ் மீண்டுவர 13 ஆண்டுகள் சென்றது. பதின்மூன்று ஆண்டுகள் ஜனாதிபதி பதவியில் இருக்கும் எதிர்பார்ப்பு எனக்கு இல்லை. இந்த வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஒரே ஒரு ஏணிதான் உள்ளது. அதுதான் சர்வதேச நாணய நிதியம். பல்வேறு அரசியல் கட்சிகள் பல்வேறு கதைகளை கூறி வருகின்றன. சரிந்த பொருளாதாரத்தில் இருந்து மீள்வதற்கு வேறு ஏணி இருந்தால் சொல்லுமாறு நான் அவர்களுக்கு கூறுகின்றேன்..

அதனால், எமது கொள்கைகளை எதிர்ப்பவர்களுக்கும், சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி முன்மொழிவுகளை சமர்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கத் தயாராக உள்ளோம். சர்வதேச நாணய நிதியம் அந்த முன்மொழிவுகளுடன் உடன்படுகிறதா என்பதைப் பார்க்க முடியும்.

எங்களுக்கு கடன் வழங்கிய பாரிஸ் கிளப், இந்தியா மற்றும் சீனா என்பன கடனை மறுசீரமைக்க இணக்கம் தெரிவித்துள்ளன. அதற்குத் தேவையான நிதி உத்தரவாதத்தை வழங்கும் முறைமை பாரிஸ் கிளப்பில் உள்ளது. இந்தியாவிடம் மற்றொரு முறைமை உள்ளது. சீனா மற்றொரு முறையை நடைமுறைப்படுத்துகிறது. பாரிஸ் சமூக நாடுகள் தங்கள் சொந்த முறையைத் தவிர இந்தியாவின் முறையையும் ஏற்றுக்கொண்டன, ஆனால் சீனாவின் முறை குறித்து இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை.

இது குறித்து மேலும் கலந்துரையாடப்பட்டு வருகிறது. அனைவரையும் ஒரே மேடைக்கு கொண்டுவந்து கலந்துரையாட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியமும் பரிந்துரைத்தது. ஆனால் சீனா உலக வல்லரசாக இருப்பதால் அவர்களின் முறை வேறு. ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி இந்தியாவின் பெங்களூரில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து நாடுகளின் கடனை எவ்வாறு மறுசீரமைப்பது குறித்து அங்கு ஆராயப்பட உள்ளது. அதில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முறை குறித்து சீன நிதி அமைச்சருடன் கலந்துரையாட எதிர்பார்க் கப்பட்டுள்ளது. அவர்களின் நிலைப்பாட்டின்படி, செயல் படுத்த இரண்டு அல்லது மூன்று மாற்று வழிகள் உள்ளன.

நாட்டின் அடிப்படைப் பிரச்சினை பொருளாதாரப் பிரச்சினையாகும். அதை நோக்காகக் கொண்டே நாம் செயற்பட வேண்டும். அது இல்லாமல், இந்த பிரச்சினையை மறைக்க முடியாது.

இன்று கட்சி, எதிர்க்கட்சி வேறுபாடின்றி 225 பேர் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே, மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும்.  2024 ஆகும் போது மீண்டும் வளர்ச்சியை நோக்கி பயணிப்போம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: