சவால்களை எதிர்கொள்ளாமல் வெற்றிகளை பெற்றுக்கொள்ள முடியாது – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Friday, January 27th, 2023

சவால்களை எதிர்கொள்ளாமல் வெற்றிகளை பெற்றுக்கொள்ள முடியாது என, பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் – பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரச அதிகாரிகள் புதியவற்றை இனம் கண்டு துணிவுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டியது அவசியம் என்றும் அவர்,தெரிவித்துள்ளார்.

இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தின் ஏற்பாட்டில் கொழும்பு பண்டரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அரச முகாமைத்துவ பட்டமளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே,அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர் –

பொருளாதார நெருக்கடியினால் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் மேலும் விரிவடைந்துள்ளன. இதனால்,தற்போது நிலவும் மோசமான நிலைமை மேலும் உக்கிரமடைந்துள்ளது.

சிதைவடைந்துள்ள பொருளாதாரம் மற்றும் முட்பாதை போன்ற யதார்த்தங்களுக்கு நாம் அனைவரும் அகப்பட்டுள்ளோம். இந்நிலையில், கவனத்திற்கொள்ள வேண்டியளவுக்கு மக்கள் மோசமான பெறுபேறுகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

அரசாங்க ஊழியர்களின் உதாசீனப் போக்கை காண முடிகின்றது. அந்த உதாசீனப் போக்கானது அவர்களுக்கு திறமை இல்லை என்பதை காட்டுவதல்ல.

மாறாக பல காலம் அரசாங்க சேவை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சிந்தனை மாற்றம் தொடர்பில் ஏற்பட்டுள்ள அதிருப்தியே இதற்கு காரணம்.

அரசாங்க அதிகாரிகளின் செயற்பாடுகள் வீழ்ச்சிரடைந்துள்ளமைக்கான காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தொடர்ச்சியான அபிவிருத்தி போன்றே சிறந்த மாற்றங்களை பெற்றுக் கொடுப்பதை உறுதிப்படுத்தும் வகையில், பயிற்சி வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: