சவால்களைக் கண்டு தப்பித்து ஓடும் பழக்கம் எங்களிடம் இல்லை – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Monday, May 9th, 2022

சவால்களை கண்டு தப்பித்து ஓடும் பழக்கம் எங்களிடம் இல்லை என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மக்களுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார் எனவும் அறிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் தமது ஆதரவாளர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்..

இது தொடர்பில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர் –

தான் எப்போதும் மக்களின் நலனுக்காகவே செயற்பட்டதாகவும், அரசியல் இலாபங்களுக்காக நாட்டை அராஜகமாக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டை சீர்குலைக்க நாங்கள் விரும்பவில்லை. சவால்களை எதிர்கொண்டு சவால்களை சமாளிப்பதுதான் எனது கொள்கை. சவால்களை கண்டு தப்பித்து ஓடும் பழக்கம் எங்களிடம் இல்லை.

அவற்றுக்கான முன்னுதாரணங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எதிர்க்கட்சிகள் அதன் சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுகின்றன.

அவர்களுக்குத் தேவையானது அதிகாரம் மட்டுமே. அரச தலைவருக்கு எவ்வித தடையுமின்றி முடிவெடுக்க முடியும். பொதுநலன் கருதி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் அதற்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார்.

நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கை தான் என்னை அரசியலுக்கு வர வைத்தது. இப்போது என்ன செய்வது என்று நான் உங்களிடம் கேட்கிறேன். உங்களுடன் ஒரு முடிவுக்கு வர நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அத்துடன், தம்மை நம்பி இந்த நாட்டில் உள்ள 69 இலட்சம் மக்கள் வழங்கிய ஆணையை மீற தாம் எண்ணம் கொண்டிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

தாய்நாட்டை முன்னிறுத்தி முதலாவதாக, இரண்டாவதாக, மூன்றாவதாக முன்னெடுக்கும் இந்த அரசியல் இயக்கத்தை விட்டு விலகும் எண்ணம் தமக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ள பிரதமர் சவால்களை முறியடித்து மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு தன்னால் இயன்றதை தொடர்ந்து செய்வேன் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பிரதமர் மகிந்த ராஜபக்ச விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு தனது பதவியை இராஜினாமா செய்வார் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: