சம்பள மதிப்பீடுகளுக்கு விசேட ஆணைக்குழு!

Friday, August 17th, 2018

அரச துறையில் சம்பள மதிப்பீடுகளை மேற்கொள்வது தொடர்பில் விசேட ஆணைக்குழுவை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவையின் இணைப்பேச்சாளரான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

அரச சேவையில் பல்வேறு சேவைக் குழுக்களினால் தமது சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரித்துத் தருமாறு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றமையால் நாட்டு மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கத்தைக் கருத்தில்கொண்டு அரச துறையில் நிலவும் சம்பளக்கட்டமைப்பு குறித்து கவனம் செலுத்தி அதனைத் தீர்த்துக் கொள்வதும் காலத்தின் தேவையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனாலேயே இதற்கு விரைவாகத் தீர்வைக் கண்டறிவதற்காக ஒவ்வொரு துறையிலும் தெளிவு மற்றும் அனுபவம் கொண்ட விசேட குழுவொன்றை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதில் ரயில் சேவையில் நிலவும் சம்பள முரண்பாட்டை திருத்துதல் என்பது ஆணைக்குழுவின் ஒரு விடயமாகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் தேசிய சம்பளம் மற்றும் சேவை ஊழியர் தொடர்பான புள்ளிவிபர ஆணைக்குழுவினருக்கும் மேலதிகமாக சம்பள மதிப்பீட்டுக்கான விசேட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த இது தொடர்பிலான ஆவணத்துக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.

Related posts: