சம்பந்தனை பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை – தமிழரசு மத்திய குழு அதிரடி நடவடிக்கை!

Wednesday, September 21st, 2022

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை பதவிகளில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இரா.சம்பந்தன் உடல் நலக்குறைவு காரணமாக அண்மைக் காலமாக செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் நிலையிலேயே அவரை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து விலக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்றுமுன்தினம் நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்துக்கு வந்திருந்த திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை இதுவரை நடந்த நாடாளுமன்ற அமர்வுகளில் அவர் சிலவற்றிலேயே கலந்துகொண்டுள்ளார். அதனால் மாவட்டத்தின் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பேசுவதற்காக சந்தர்ப்பங்களும் குறைந்துள்ளன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவை தொடர்பாகக் ஆராயப்பட்டு, இரா.சம்பந்தனிடம் பதவி விலகுவது தொடர்பாகக் கலந்துரையாடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வடக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோரைக் கொண்ட குழுவே நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் இரா.சம்பந்தனுடன் இந்தக் குழுவினர் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

“எம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” – அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு நன்றி - தடுப்பூசி பெற்றமை தொ...
தகுதியான 5,800 இலங்கையர்களுக்கு கொரிய வேலைவாய்ப்பு வழங்கப்படும் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெ...
பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நாட்டில் அறிவார்ந்த அரசியல்வாதிகள் இல்லை - இலங்கை வாகன இறக்குமதியாள...