சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகை பன்மடங்காக அதிகரிப்பு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தெரிவிப்பு!
Monday, November 13th, 2023
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த வருடங்களில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகை 60 பில்லியன் ரூபாவாக இருந்த போதிலும், 2024 ஆம் ஆண்டில் அது 183 பில்லியன் ரூபா வரை, மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அஸ்வெசும பலன்களைப் பெறுவதில் தாமதம் ஏற்படும், தகுதியுள்ள பயனாளிகளுக்கு கடந்த காலத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை.
ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோய் உதவித்தொகை 2,500 ரூபாவினால் அதிகரிக்கப்படும். புதிய குடும்பங்கள் பயனாளிகள் பட்டியலில் தாமதமின்றி இணைத்துக்கொள்ள 6 மாதங்களுக்கு ஒரு முறை, அஸ்வெசும பயனாளிகளின் பட்டியல் மதிப்பாய்வு செய்யப்படும்.
அஸ்வெசும வேலைத்திட்டம், ஊனமுற்றோர்கள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர்களுக்கான கொடுப்பனவுகளுக்காக 2024 இல் ஒதுக்கப்படும் தொகை, 205 பில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்படும்.
கடந்த காலத்தில் நெருக்கடியை எதிர்கொண்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தும் திட்டத்தை வலுப்படுத்த 30 பில்லியன் ரூபா சலுகைக் கடன் வசதி வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த நாட்டில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதாரக் கருத்தியல்கள் தோல்வி அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் முறைமையையும், பொருளாதார முறைமையையும் முற்றாக மாற்றியமைத்து, புதிய கோணத்தில் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கடந்த கால அனுபவங்கள், உலகளாவிய போக்குகள் மற்றும் எதிர்கால சவால்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு எமக்குரிய தனித்துவமான பொருளாதார மற்றும் அரசியல் முறைமையை நாம் உருவாக்க வேண்டும் என்று, 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டில் இலங்கையின் முதன்மை வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.7% ஆக இருந்த போதிலும், 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலங்கையின் முதன்மை வரவு செலவுத் திட்டத்தில் மேலதிகத்தை உருவாக்க முடிந்ததாக, 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி தெரிவித்தார்.
2022 செப்டெம்பர் மாதத்தில் 70% ஆக உயர்ந்திருந்த பணவீக்கத்தை, கடந்த ஒக்டோபர் மாதத்திற்குள் 1.5% ஆகக் குறைக்க முடிந்ததாகவும், அன்று பூஜ்ஜியமாகக் குறைந்திருந்த அந்நியச் செலாவணிக் கையிருப்பை, 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை உயர்த்துவதற்கு முடிந்தது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


