சமூகங்களின் தொடர்ச்சியான இயங்குநிலைக்கு தகவல் தொடர்பு ஆற்றும் பணி மிகப்பெரியது – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச சுட்டிக்காட்டு!

Monday, May 17th, 2021

மனித தொடர்பாடலுக்கும் சமூகங்களின் தொடர்ச்சியான இயங்குநிலைக்கும் தகவல் தொடர்பு தொழில் நுட்பங்கள் ஆற்றுகின்ற பாரிய பங்களிப்பை, கோவிட் நெருக்கடி காலமானது தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கின்றது என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடுகளுக்கு இடையேயும் மக்கள் சமூகங்களிற்கு இடையேயும் இலத்திரனியல் தொலைத்தொடர்பு வசதிகளில் உள்ள அதிர்ச்சியூட்டும் ஏற்றத்தாழ்வுகளையும் இந்த நெருக்கடி காலகட்டம் எமக்கு வெளிப்படுத்தியிருக்கின்றது  என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று ‘அனைத்துலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக நாள்’ஆகும் இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலத்திரனியல் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினை மனித குலம் அவசரமாக வளர்த்தெடுக்க வேண்டிய தேவைப்பாட்டையும் இந்த காலகட்டம் எமக்கு உணர்த்தி நிற்பதுடன் எந்த ஒரு சமூகமும் இந்த விடயத்தில் பின்தங்கிவிடாதபடியாக அந்த நிறைவான இலக்கை நோக்கி நாம் முன்னேற வேண்டியதும் அவசியமாகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த நாள் பிரகடனப்படுத்தப்பட்டதன் நோக்கம் – இணையம் மற்றும் ஏனைய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பங்களின் பயன்பாடானது – சமூகங்கள் மற்றும் நாடுகளின் முன்னேற்றத்திற்கு வழங்கக்கூடிய ஆக்கத்திறனை நிறைவுபடுத்துவதும், ஓர் இலத்திரனியல் தகவல் பரிமாற்ற புரட்சி தொடர்பான விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவதுமாகும்.

அதே வேளையில் – இந்த தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமானது – நற்சிந்தனையுடன், நற்கருத்துக்களை பரப்பி ஆக்கபூர்வமான மாற்றங்களை மனுக்குலத்தில் ஏற்படுத்துவதற்கே பயன்படுத்தப்பட வேண்டும்.

அதேவேளை ஒரு நாட்டின் மேம்பாட்டிற்குத் தடையாகவோ, ஒட்டுமொத்த மானிட முன்னேற்றத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாகவோ பரப்பப்படும் தகவல்கள் இந்த தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் நற்பயனையும் உச்சப் பயன்பாட்டினையும் மனிதர்கள் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பபுக்களை இல்லாமல் செய்யும் ஆபத்திற்கே இட்டுச்செல்லும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: