சமுர்த்தி கொடுப்பனவுடன் வழங்கப்படும் ஏனைய சலுகைகளை நீக்க நடவடிக்கை – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Thursday, January 19th, 2023

சமுர்த்தி கொடுப்பனவுடன் வழங்கப்படும் ஏனைய சலுகைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், சமுர்த்தி மானியம் தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இல்லாதவர்கள், கஷ்டப்படுபவர்களை கவனிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களை பலப்படுத்த வேண்டும், அவர்கள் சுயமாக எழுச்சி பெறும் நிலைக்கு கொண்டு வர வேண்டும் எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இன்றி அரசியல் பொறிமுறையாக சமுர்த்தியை வைத்துக் கொள்ள அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமுர்த்தி தொடர்பான ஏனைய விடயங்களை நீக்குவதற்காக ஜனாதிபதியிடம் சென்று பேசிய போது, அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு கூறினார்.

சமுர்த்தி கிடைக்க வேண்டியவர்களுக்கு கிடைக்க வேண்டும். தகுதியானவர்களுக்கு சமுர்த்தி வழங்க வேண்டும்.

இன்றும் சமுர்த்தி கிடைக்காதவர்கள், எனினும் வறுமையில் உள்ளவர்களுக்கு நாம் உதவ வேண்டும்.

ஆனால் ஏனைய சலுகைகளை அகற்றுவது தொடர்பில் யார் என்னை திட்டினாலும் பின்வாங்க மாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: