சமுர்த்திப் பயனாளிகளின் கடன் தேவைகளை அடையாளம் காணும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Tuesday, August 7th, 2018

சமுர்த்தி தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்திப் பயனாளிகளின் திறனை மதிப்பீடு செய்தல் மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிக்கான கடன் தேவைகளை அடையாளம் காணும் வேலைத்திட்டம் நாடுபூராகவும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழுள்ள சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சமுர்த்தி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை சமுர்த்தி குறுநிதி திட்டத்தினூடாக பல கடன்கள் பெற்றுள்ள பயனாளிகளில் பெரும்பாலானோர் உற்பத்தியாளர்களாகவும் உருவாகியுள்ளனர்.

சிறியளவில் ஆரம்பிக்கப்பட்ட தொழில் முயற்சிகள் இன்று பிரதேச மற்றும் தேசிய சந்தைகளுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதுடன் பாரிய தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளன.

அவ்வாறானவர்களின் முதலீட்டுத் திறன்களை மதிப்பீடு செய்து அவர்களுக்கான விசேட கடன் வேலைத்திட்டங்கள் மேலும் செயற்படுத்தல் தொடர்பாக அவதானம் செலுத்தப் படவிருக்கிறது.

தற்போது இதன் முக்கியத்துவத்தை கவனத்தில்கொண்டு முதலீட்டுத் திறன்களை மதிப்பீடு செய்வதற்கும் நடுத்தர அளவிலான கடன் தேவைகளை அறிந்து கொள்வதற்குமான ஆய்வு முறைமை சமுர்;த்தி அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் இதற்கான ஆய்வுக் குழுக்கள் நாட்டிலுள்ள அனைத்துக் கிராம அலுவலர் பிரிவுகளிலும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இக்குழுவில் பிரிவின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அலுவலர் அல்லது பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கட்டுப்பாட்டுச் சபையின் உறுப்பினர் அல்லது குறித்த பிரிவின் சமுர்த்தி சமுதாய மட்டத்தின் தலைவர், செயலாளர் ஆகியோர் அடங்குகின்றனர்.

இதேவேளை கிராம அலுவலர் பிரிவு மட்ட, பிரதேச செயலகப் பிரிவு மட்ட , மாவட்ட மட்ட ஆய்வுகள் அனைத்தும் எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு முன்னர் பெறப்பட்டு 31 ஆம் திகதிக்கு முன் தேசிய மட்ட அறிக்கை தயாரிப்பதற்காக அனுப்பப்பட வேண்டுமென சமுர்த்தி திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ஜெ.தடலகே சகல மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கைகளை அனுப்பியிருக்கிறார். மேலும் அடுத்துவரும் மாதங்களில் தெரிவு செய்யப்பட்ட நடுத்தர முயற்சியாண்மையாளர்களுக்கு விசேட கடன் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப் படவிருப்பதாகவும் இவ்விடயத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related posts:


வடக்கிலுள்ள அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன – மிகுந்த மகிழ்ச்சியில் மாணவர்களும் பெற்றோர...
இலங்கை போன்ற வளரும் நாடுகளின் நிலையான வளர்ச்சிக்கு அமெரிக்கா என்ன செய்திருக்கிறது என்று தன்னைத்தானே ...
தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமற்றவை - ஆஸ்திரேலியா நீதிமன்றம் தெரிவிப்பு!