சமுத்திரங்கள் தொடர்பான சட்டங்களுக்கான சட்ட ஏற்பாடுகளை அடையாளம் காண்பதற்காக விசேட குழு!

Tuesday, November 16th, 2021

சர்வதேச மற்றும் உள்ளூர் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் சமுத்திரங்கள் தொடர்பான சட்டங்களுக்கான சட்ட ஏற்பாடுகளை அடையாளங் காண்பதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள இலங்கையின் மூலோபாய ரீதியான அமைவிடத்தைக் கருத்திற் கொண்டு, சமுத்திர கேந்திர நிலையமாக எமது நாட்டை மேம்படுத்தும் போது சர்வதேச ஒப்பந்தங்களை ஏற்று அங்கீகரிக்கும் போது சர்வதேச தேவைகளை கருத்தில் கொண்டும், சட்டரீதியான உட்கட்டமைப்பு வசதிகளை தயாரிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் குறித்த துறைசார்ந்த விடயங்களை ஆராய்வதற்காக முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி பி.ஏ.ரத்னாயக்கவின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதுடன், குறித்த குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பான தொடர் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

அண்மையில் இலங்கையின் கடல் எல்லைக்குள் எம்.ரீ.நியூவ் டயமன்ட் கப்பல் மற்றும் எம்.ரீ.எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் ஆகியன விபத்துக்குள்ளானமையால் ஏற்பட்ட பாதிப்புக்களைக் கருத்தில் கொள்ளும்போது புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, இதற்கு முன்னர் பி.ஏ.ரத்னாயக்கவின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, புதிதாக அறிமுகப்படுத்த வேண்டிய அல்லது தற்போது காணப்படும்,

திருத்தப்பட வேண்டிய சட்டங்களை அடையாளங் கண்டு அது தொடர்பாகவுள்ள பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி சந்தன ஜயசுந்தரவின் தலைமையிலான ஏற்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்காக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறப்பிடத்தக்கது.

Related posts: