சமஷ்டிக் கோரிக்கை வெறும் தேர்தல் கோசமல்ல – மருதங்கேணியில் ஈ.பி.டி.பி. முக்கியஸ்தர் விந்தன்!

Saturday, September 8th, 2018

தமிழ் பேசும் மக்களின் நிரந்தர விடியலுக்கு உயிர் நாதமாக திகழும் சமஷ்டிக் கோரிக்கை என்பது வெறுமனே தேர்தல் கோசம் அல்ல என்றும் அது எமது மக்கள் அடைந்தே தீரவேண்டிய இலட்சியத் திசை நோக்கிய இலக்காகும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார்.

மருதங்கேணியில் நடைபெற்ற கட்சியின் வட்டார செயலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

நாம் எமது மக்களின் நிரந்தர விடியலுக்காக ஆயுதம் ஏந்திப் போராடியவர்கள். ஆனாலும் காலச் சூழலை உணர்ந்து எமது போராட்டப் பாதையில் சந்திபிரித்துக் கொண்ட நாம் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளுக்காக ஜனநாயக வழியில் போராடியும் வாதாடியும் வருகின்றோம்.

எமது மக்களின் அரசியல் அபிலாசைகள் அனைத்தையும் உள்ளடக்கியதே மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது உறுதியான கோட்பாடாகும். சமஷ்டியே நாம் கோரும் தீர்வின் உயிர் நாதமாகத் திகழ்கின்றது. அதை அடைந்தே தீரவேண்டும் என்பதற்காக நாம் உறுதியாக உழைத்து வருகின்றோம்.

எங்கிருந்து தொடங்கவேண்டும் என்ற யதார்த்த நிலையிலிருந்து நாம் எமது பயணத்தை முன்னெடுத்து வருகின்றோம். தமிழ் மக்களின் அரசியல் தளத்தில் இருப்பவர்கள் பலரும் இன்று சமஷ்டிக் கோரிக்கையை உச்சரித்து வருகின்றார்கள். ஆனாலும் அதை அடைவதற்காக எந்தவொரு பொறிமுறையையும் அவர்கள் கையாண்டிருக்கவில்லை.

இருப்பினும் எமது யதார்த்த நடைமுறையை ஏற்று வழிமுறைக்கு மட்டும் வந்திருக்கின்றார்கள். சமஷ்டிக்கு ஒப்பான தீர்வுகள் கடந்த காலங்களில் கிடைத்தபொழுது அதை ஏற்காமல் தட்டிக்கழித்தும் வந்திருக்கின்றார்கள்.

சமஷ்டித் தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கான அரசியல் பலத்தை பெற்றிருந்தும்  அதை அவர்கள் பயன்படுத்தியிரக்கவில்லை. இன்று கூட அதுதான் நடந்துகொண்டிருக்கின்றது. இவ்வாறானவர்கள் இன்று சமஷ்டி பற்றி உச்சரிப்பது வாக்குகளை அபகரிப்பதற்காகவே அன்றி உரிமைகளை பெற்றுத்தருவதற்காக அல்ல.

இவ்வாறு தெரிவித்துள்ள ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர் விந்தன் அவர்கள் சமஷ்டிக் கோரிக்கையை சிலர் தொடர்ந்தும் தேர்தல் கோசமாக பயன்படுத்திவருவது எமது மக்களுக்கு செய்யும் மாபெரும் வரலாற்று துரோகமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளரும் வடமராட்சி தென்மராட்சி பிரதேச நிர்வாக ஒருங்கிணைப்பாளருமான ஐயாத்துரை சிறி ரங்கேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற குறித்த சந்திப்பின் போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாதக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், கரவெட்டி உதவி நிர்வாக செயலாளர் துஷிகரன். பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்களான செபஸ்ரியன் மற்றும் கலாவதி ஆகியோர் உடனிருந்தனர்.

41299956_1855134141247799_5700170068562804736_n

41181749_1127733800712447_8656888515054796800_n

Related posts: