சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டாலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – எரிசக்தி அமைச்சு உறுதியளிப்பு!

Monday, January 10th, 2022

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இம்மாதம் 23 ஆம் திகதி கச்சா எண்ணெய் தொகுதி இலங்கைக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர்.வோல்கா தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக கச்சா எண்ணெயை கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட சிரமங்கள் காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஜனவரி 03 ஆம் திகதி தற்காலிகமாக மூடப்பட்டது.

எவ்வாறாயினும், சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டாலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என எரிசக்தி அமைச்சு உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

நாட்டிற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு நிதி பற்றாக்குறை காணப்படுவதாகவும் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்..

நிலவும் மின்சார நெருக்கடி தொடபாக இன்று திங்கட்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மின்சார பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் சம்பந்தப்பட்ட அமைச்சர் கலந்துரையாடுவர் என்றும் தெரிவித்தார்.

எண்ணெய் இறக்குமதிக்கான நிதிப் பற்றாக்குறையே பிரதான பிரச்சினை எனவும், இதனை மக்களிடம் மறைக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், நிலைமையை சமாளிப்பதாகவும் ஏப்ரல் மாதத்திற்குள் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வேலைத்திட்டத்தை நிதியமைச்சு வகுத்துள்ளது என்றும் திலும் அமுனுகம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: