சந்தைகளில் இனிமேல் உள்ளூராட்சிசபைகளே வரி அறவிட வேண்டும் – உற்பத்தியாளர்கள்!

Thursday, January 11th, 2018

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சில சந்தைகளில் வரி அறவிடும் பணியை அந்தந்த உள்ளூராட்சி சபைகள் மேற்கொண்டு வருவதால் குறித்த சபைகளே தொடர்ந்து சந்தைகளில் வரியறவிடும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுள்ளனர் சந்தைக்குச் செல்லும் உற்பத்தியாளர்கள்.

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சந்தைகள் பிரிவிற்குட்பட்ட உள்ளூராட்சி சபைகளால் கடந்த ஒக்டோபர் மாதம் தொடக்கம் கேள்வி கோரப்பட்டன. எனினும் சந்தைகளைக் குத்தகைக்கு எடுக்க யாரும் முன்வராததால் சபை நிர்வாகத்தினரே சந்தைகளில் வரி அறவிடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அச்சுவேலி, புத்தூர், சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் உள்ளிட்ட சந்தைகளை நகர மற்றும் பிரதேசசபைகளே நடத்துகின்றன.

கடந்த காலங்களில் சந்தைகளுக்கு உற்பத்திப் பொருள்களைக் கொண்டு வரும்போது அங்கு பணியாற்றும் குத்தகையாளர்களின் பிரதிநிதிகள் தங்களின் விருப்பத்திற்கேற்ற வகையில் வகைதொகையின்றி வரியை அறவிட்டனர். இதனால் உற்பத்தியாளர்கள் இலாபமடைய முடியாமல் இருந்தது. கடந்த எட்டு நாள்களாக சந்தைகளுக்கு உற்பத்திப் பொருள்களைக் கொண்டு செல்வோரிடம் சபை அலுவலர்களால் நியாயமான கட்டணம் அறவிடப்படுகிறது. இதனால் சந்தைப் பொருள்கள் கொண்டு வரும் உற்பத்தியாளர்கள் தமது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதுடன் சபை அலுவலர்களே தொடர்ந்து சந்தையில் வரி அறவிடுவதை மேற்கொள்ளவேண்டுமெனவும் கேட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் சந்தையைக் குத்தகைக்கு விடாமல் தொடர்ந்து சபை ஊழியர்கள் மூலம் சந்தை வரி அறவிடும் சபையாக சாவகச்சேரி நகரசபை செயல்பட்டு வருகிறது. கடந்த வருடம் முதல் சாவகச்சேரி பிரதேசசபையும் கொடிகாமம் சந்தையில் வரி அறவிட்டு வருகிறது.

இந்தச் சந்தைகள் குத்தகைக்கு விடுவதற்கு கேள்வி அறிவித்தலில் குறிப்பிடும் தொகையை விட சந்தையில் ஏற்படும் செலவுகளுடன் (ஊழியர் வேதனம், பற்றுச்சீட்டுக்கள் அச்சிடல் போன்றவை) சந்தையிலிருந்து மேலதிகமாக வருமானம் கிடைக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது. சாவகச்சேரி நகரசபை சந்தை கடந்த 2012 ஆம் ஆண்டு குத்தகையாக 50 இலட்சம் ரூபா மதிப்பிடப்பட்டு கேள்விகள் கோரப்பட்டு எவரும் விண்ணப்பிக்காததால் சபை நடத்தியது. அங்கு கடமையாற்றிய ஊழியர்களின் வேதனம் உட்பட அனைத்து செலவுகளையும் நீக்கி வருமானமாக 98 இலட்சம் ரூபா கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: