சட்ட வல்லமைகளை வெளிப்படுத்தும் தருணம் இதுவல்ல: நாட்டை பாதுகாக்க அனைவரும் ஒன்றுபடுங்கள் – வடக்கு மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தவராசா தெரிவிப்பு!

Wednesday, April 22nd, 2020

அரசியலமைப்பு அல்லது சட்டவாக்கத்தில் உள்ள நுணுக்கங்களை வைத்து சட்டரீதியாக தமது ஆளுமைகளை அல்லது தனிப்பட்ட சட்ட வல்லமைகளை வெளிப்படுத்தும் தருணம் இதுவல்ல என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசகரும் வடக்கு மாகாணசபையின் முன்னாயள் எதிர்க்கட்சி தலைவருமான சி. தவராச தெரிவித்துள்ளார்.

தற்போது நாடு எதிர்கொண்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் காலம் தாழ்ந்து செல்வது போன்ற இரு வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இது தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

எமது நாட்டின் அரசியலமைப்பிற்கும் தேர்தல் சட்டத்திற்கும் இடையே ஓர் இடைவெளி காணப்படுகின்றது.

அதாவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்துவரும் மூன்று மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என இலங்கை அரசியலமைப்பு கூறுகின்றது.

அதேநேரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு தேர்தலை வரையறையின்றி சூழ்நிலைக்கு ஏற்ப ஒத்திவைக்கும் அதிகாரம் உள்ளது என தேர்தல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அனர்த்தத்தால் நடைபெற இருந்த பொதுத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமைக்கு இத்தகைய ஒரு சூழல்தான் காரணமாகியுள்ளது.

இத்தகைய சூழ்நிலையை வைத்துக்கொண்டு பழைய நாடாளுமன்றை கூட்டுமாறு கோருவது எவ்விதத்திலும் நியாயம் கிடையாது. ஏனெனில் பழைய நாடாளுமன்றை கூட்டுவதனால் அதைக்கொண்டு ஆக்கபூர்வமான எதுவும் நடைபெறப் பொவதும் கிடையாது.

ஏனெனில் பழைய அரசு குறிப்பாக கடந்தவருடம் இதே ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் அதிகளவான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும் குறிப்பாக இந்தியா கூட பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று  நடைபெறவுள்ளதாக தகவல்களை வழங்கியிருந்தும் கூட நாட்டை பாதுகாக்க எதுவித நடவடிக்கையையும் மேற்கொள்ளாது பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்ட அரசு அது.

அத்தகைய நிலையில் அதே நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிகம் கொண்ட நாடாளுமன்றத்தை கூட்டுமாறு  கோருவதில் என்ன நியாயம் உண்டு என்றும் கேள்வியெழுப்பியிருந்தார்.

அதுமட்டு மல்லாது அதே பழைய அரசு இன்றும் ஆட்சியில் இருந்திருந்தால் தற்போதைய நிலையில் இலங்கையின் நிலமை இத்தாலி பிரான்ஸ் ஸ்பெயின் போன்ற நாடுகளைப் போல பேரவலத்தை சந்தித்திருந்திருக்கும்.

அந்தவகையில் நாம் அரசியலமைப்பு அல்லது சட்டவாக்கத்தில் உள்ள நுணுக்கங்களை அல்லது சட்டரீதியான ஆளுமைகளையோ  கொண்டு தனிப்பட்ட சட்ட வல்லமைகளை வெளிப்படுத்தும் தருணம் இதுவல்ல எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் நாட்டைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று கோரிக்கைவிடுத்த சி.தவராசா அவர்கள் இன்றைய அரசு உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா பரவலை எதிர்கொண்ட விதம் அதை தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் ஆக்கபூர்வமானதாகவும் வினைத்திறன் கொண்டதாகவும் உள்ளது என தெரிவித்ததுடன் அதை வலுவானதாக்கும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமே தவிர நாடாளுமன்றை கூட்டுங்கள் என்று கூச்சலிடுவதையோ அன்றி அதை மையப்படுத்தி நீதிமன்று செல்வதாலோ எவ்வித நன்மையும் கிடைக்கப்போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:


எதிர்வரும் 18 ஆம் திகதிமுதல் தொடருந்து போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வர முடியும் - தொடருந்து திணைக்கள...
கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம் -03 வருடங்களுக்குள் நிறைவடையமெனவும் தெர...
உயர்தரப் பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர...