உயர்தரப் பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர அறிவிப்பு!

Thursday, December 21st, 2023

G.C.E A/L பரீட்சைக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் இருப்பின் அதனை மேற்கொள்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 22 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்காக கால அவகாசம் கடந்த  19 ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்த நிலையில், குறித்த கால அவகாசம் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அத்துடன் https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளம் ஊடாக அனைத்து திருத்தங்களையும் மேற்கொள்ளலாம் எனவும், அதன் பிரதியை அனுப்புவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஒரு தடவை மட்டுமே குறித்த திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்பதை கவனத்திற் கொள்ளவும். அதற்கமைய பாடசாலைப் பரீட்சார்த்திகள் தமது அதிபர் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனிப்பட்ட முறையிலும் தமது திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.

பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“நீங்கள் விண்ணப்பித்தது போல் பெயர் இருக்கிறதா? பாடங்கள் சரியா? மொழி மூலம் சரியா? பிறந்த திகதி சரியா? என பார்க்கவும். இவற்றில் பிழை இருந்தால் அவகாசம் கொடுத்துள்ளோம். டிசம்பர் 22 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை அதற்கான நேரம் உண்டு.” என்றார்.

இதேவேளை, 2023 க.பொ.த. உயர் தரப் பரீட்சைகளை எதிர்வரும் 2024 ஜனவரி 04 முதல் – 31 வரை நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 298 பரீட்சை நிலையங்களில் நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாடசாலைப் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள், நேர அட்டவணைகள் ஆகியன உரிய பாடசாலைகளின் அதிபர்களுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் அவர்கள் தமது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கும் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத பாடசாலைப் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகளை அதிபர்களும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனிப்பட்ட முறையிலும் பரீட்சைகள் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளத்தளமான www.doenets.lk ஊடாக அனுமதி தரவிறக்கம் செய்து கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இப்பரீட்சைக்குரிய நேர அட்டவணை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: