சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேலணையில் நிரந்தர பொலிஸ் காவலரண் அமைக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா!

Monday, January 21st, 2019

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் தற்போது பல குற்றங்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் நடைபெற்றுவருவதை காணமுடிகின்றது. இவ்வாறான பிரச்சினைகளிலிருந்து எமது பிரதேசத்தையும் மக்களையும் பாதுகாப்பதில் குறிப்பாக வேலணை பிரதேசத்தின் சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்துவதில் எமது பிரதேச சபைக்கும் கனதியான பொறுப்புள்ளது. அந்தவகையில் எமது வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் ஒரு பொலிஸ் காவலரண் அமைக்கப்பட வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி ஜெயகாந்த் அனுஷியா வலியுறுத்தியுள்ளார்

வேலணை பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமர்வு இன்றையதினம் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி  தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரேரணை ஒன்றை சபையில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஒரு பிரதேசத்தின் வளர்ச்சிக்கு அந்த பிரதேசத்தின் பொருளாதார வளங்களுடன் அங்கு வாழும் மக்களது பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதுமட்டுமல்லாது எமது பிரதேசம் தீவகப் பகுதியின் குறிப்பாக நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, வேலணை ஆகிய பிரதேசங்களின்  நடுநாயகமாக உள்ளது.

இதிலும் எமது வேலணை பிரதேசம்தான்; தீவகத்தின் அதிக மக்களை உள்ளடக்கிய பெரிய பிரதேசமாக காணப்படுகின்றது. அத்துடன் மண்டைதீவு, புங்குடுதீவு, வேலணை, நயினாதீவு. அல்லைப்பிட்டி ஆகிய பெரும் பிரதேசங்களை கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாது எமது பிரதேசம் வடபகுதியின் முக்கிய சுற்றுலாதலங்களையும் அதிகம் கொண்டுள்ளது. ஆனாலும் எமது பிரதேசத்தின் சட்டம் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையமே மேற்கொண்டு வருகின்றது.

ஏதாவதொரு அசம்பாவிதமோ அன்றி விபத்துக்களோ நடந்தால் அந்த இடத்திற்கு உடனடியாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து பொலிஸார் வருகை தருவது மிக தாமதமாகவே காணப்படுகின்ற நிலை உள்ளது.

அந்தவகையில் எமது வேலணை பிரதேசத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, மக்களிற்கு பொலிஸ் தொடர்பான தேவைப்பாடுகளை இலகுபடுத்துவதற்காக எமது சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு நிரந்தர பொலிஸ் காவலரண் அமைக்கப்பட வேண்டும் என நான் இந்த சபையில் ஒரு பிரேரணையை முன்வைக்கின்றேன்.

எமது பிரதேசத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத மணல் அகழ்வு கால்நடைகள் கடத்தப்படல் மற்றும் இதர சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மக்களின் நன்மை கருதியதாக பொலிஸ் நிலையம் ஒன்று அமைக்கப்படுவதற்கு எமது இந்த சபையின் ஆட்சிக் காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

viber image

123

11

Related posts: