சட்டமா அதிபருடன் பிரதமர் அவசர ஆலோசனை!

Wednesday, September 6th, 2017

20ஆவது திருத்தச்சட்ட வரைபில் சில திருத்தங்களை அவசரமாக மேற்கொள்வது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவுடன் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் சட்டமா அதிபருக்குமிடையில் நேற்று மாலை அலரி மாளிகையில் இந்த விசேட சந்திப்பு இடம்பெற்றது

குறித்த விசேட கலந்துரையாடலின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட மேலும் சில பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை குறித்தும் அதில் திருத்தங்களை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய சட்ட ஏற்பாடுகள் பற்றியும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

மாகாண சபைகளைக் கலைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்கும் வகையிலும், சகல மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்கு வழிவகுக்கும் 20 ஆவது திருத்தச் சட்டவரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, மாகாண சபைகளின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், மேற்படி சட்டமூலம் மாகாண சபைகளில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

ஊவா, தென் ஆகிய மாகாண சபைகள் இதை நிராகரித்துள்ளன. மேல், சப்ரகமுவ மாகாண சபைகளிலும் பெரும் இழுபறிக்கு பின்னர் வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது.வடக்கு, கிழக்கு மாகாண சபைகளும் போர்க்கொடி தூக்கியிருந்தன. இதையடுத்தே 20ஆவது திருத்தச் சட்டத்தில் சில திருத்தங்களை செய்வதற்கு அரசு தீர்மானித்தது. இது பற்றியே சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறப்பட்டுள்ளது.இதன்படி திருத்தங்களை உள்ளடக்கிய புதிய சட்டமூலம் மாகாண சபைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதன் காரணமாகவே 20 மீதான விவாதத்தை வடக்கு, கிழக்கு, மேல் ஆகிய மாகாண சபைகள் 7ஆம் திகதிவரை ஒத்திவைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: