சடலத்தை எடுத்துச் செல்ல பேரம் – யாழ். போதனா மருத்துவமனைப் பணியாளர்கள் நால்வருக்கு கட்டாய விடுமுறை!

Saturday, January 19th, 2019

யாழ் போதனா மருத்துவமனையில் இருந்து இறந்தவர்களின் சடலத்தை வெளியே கொண்டு செல்வதற்கு வாகன உரிமையாளர்கள் மற்றும் பெட்டி விற்பனையாளர்களுடன் பேரம் பேசும் தொடர்பை பேணிய குற்றச்சாட்டில் நால்வருக்குக் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மருத்துவமனை நிர்வாகத்தினால் சுகாதார அமைச்சுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் சடல அறைக்குக் கொண்டு செல்லப்படும் சடலங்களை உறவுகளிடம் ஒப்படைப்பதற்காக காத்திருக்கும் சந்தர்ப்பங்களில் இறந்தவர்களின் உறவினர்களிடம் மருத்துவமனையின் சில பணியாளர்கள் உடலைக் கொண்டு செல்வதற்கு குறைந்த விலையில் சவப்பெட்டியினைக் கொண்டு செல்வதற்குமான வாகன வசதியினையையும் ஏற்படுத்தி தருவதாகக் கூறி தமக்கு இசைவான வர்த்தகர்களிடம் அனுப்பி வைத்து அதன் மூலம் தரகுப் பணம் பெற்று வந்துள்ளனர்.

மருத்துவமனை நிர்வாகம் இதனை ஆராய்ந்த சமயம் அச்செயலில் நால்வர் தொடர்ச்சியாக ஈடுபடுவது உறுதி செய்யப்பட்ட நிலையில் குறித்த நால்வரையும் கட்டாய ஓய்வில் அனுப்புமாறு சுகாதார அமைச்சுக்குப் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பாமர மக்களின் சேவையே மருத்துவமனையில் முக்கியம் என்பதால் முன்பும் இவர்கள் மருத்துவமனை நிர்வாகத்தினால் எச்சரிக்கை செய்யப்பட்டனர். அதன் பின்னரும்  இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து சுகாதார அமைச்சுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Related posts: