க.பொ.த சாதாரண பரீட்சையில் வடக்கு, கிழக்கு பின்னடைவு!

Friday, April 1st, 2016

அண்மையில் வெளியாகியுள்ள 2015ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை முடிவுகளின்படி வடக்கு, கிழக்கில் உள்ள மாவட்டங்கள் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன. இது இதுவரை நிகழாத துர்ப்பாக்கியம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்-

யுத்த காலங்களிலும், அதற்கு முன்னரும் வடகிழக்கு மாகாணங்களின் கல்வித் தரம் உயர்ந்தே காணப்பட்டது. இதற்கான சரியான அளவு கருவியாக கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையை மட்டுமே கொள்ள முடியும். தரம்.5 புலமைப் பரிசில் பரீட்சையையோ, க.பொ.த உயர்தர பரீட்சையையோ கொள்ள முடியாது. க.பொ.த உயர்தர பரீட்சையின் சித்திக்கு பல காரணிகள் உள்ளன.

ஆனால் க.பொ.த சாதரணதர சித்திக்கு தனியே பாடசாலைக் கல்வியை மட்டுமே சொல்ல முடியும். க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றோர் வரிசையில் யாழ்ப்பாண மாவட்டம் 21ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் தரும் விடயமாகும்.

இதைவிட ஒன்பது இடங்களுக்குள் வடகிழக்கு மாகாணங்களின் மாவட்டங்கள் எவையும் இடம்பெறவில்லை. மன்னார் 10ஆம் இடத்திலும், அம்பாறை 13ஆம் இடத்திலும், வவுனியா 16ஆம் இடத்திலும், மட்டக்களப்பு 17ஆம் இடத்திலும், யாழ்ப்பாணம் 21ஆம் இடத்திலும், திருகோணமலை 23ஆம் இடத்திலும், முல்லைத்தீவு 24ஆம் இடத்திலும், கிளிநொச்சி 25ஆம் இடத்திலும் உள்ளன.

இந்த தரவரிசையானது எப்போதும் நிகழாத ஒன்றாகவே காணப்படுகின்றது.

தமிழர் பிரதேசங்களில் இத்தகைய நிலை ஏற்பட்டிருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மாகாண மட்டத்தில் உள்ள பல குறைபாடுகள் அதற்கு முழுக்காரணமாக அமைகின்றன. குறிப்பாக முறையற்ற ஆசிரிய இடமாற்றங்கள், முறையற்ற அதிகாரிகளின் இடமாற்றங்கள், அரசியல் தலையீடுகள், கல்வியில் அனாவசியமான வெளியாரின் தலையீடுகள். இவற்றைவிட கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்களின் சுயமான சிந்தனைக்கு ஏற்படுத்தப்படும் முட்டுக்கட்டைகள். இவையே இன்றைய வீழ்ச்சிக்கு காரணமாக அமைகின்றன.

இவை எல்லாவற்றையும் விட வடகிழக்கு மாகாணங்கள் கல்வியில் திட்டமிட்டு அழிகப்படுகிறது என்ற உண்மையை நாம் அனைவும் உணரவேண்டும், என்பதோடு இன்னும் வெளிப்படுத்த முடியாத அபாயகரமான நிலைமைகள் உள்ளன என்பதனை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டி நிற்கின்றது

Related posts:


தடுப்பூசி வழங்கலை சட்டமாக்கும் பணிகளை துரிதப்படுத்துங்கள் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுற...
பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவது கடினம் - அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!
நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை நிறைவேறாது - அரசாங்கத்தின் பிரதம கொற...